;
Athirady Tamil News

தமிழக மாணவர்கள்- ஊழியர்கள் மோதல்… போர்க்களமாக மாறிய திருப்பதி சுங்கச்சாவடி..!!

0

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சுங்கச்சாவடியில் தமிழகத்தைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர்களுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியது. நேற்று தேர்வு முடிந்து தமிழகம் திரும்பிய மாணவர்களில் ஒருவரின் வாகனத்திற்கு, எஸ்.வி.புரம் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் செலுத்தும்போது, அந்த வாகனத்திற்கான பாஸ்டேக் வேலை செய்யவில்லை.

இதனால் பணம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வாகனத்தை மட்டும் ஓரங்கட்டிவிட்டு, மற்ற வாகனங்கள் செல்ல அனுமதிக்கும்படி ஊழியர்கள் கூறி உள்ளனர். அப்போது மாணவர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் வந்து மாணவர்களை கலைந்துசெல்லும்படி அறிவுறுத்தினர்.

மேலும், மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என்றும் கூறினர். ஆனால் மாணவர்களோ ஆந்திர பதிவெண் கொண்ட வாகனங்களை செல்ல விடாமல் இடையூறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் அப்பகுதியே போர்க்களம்போல் காட்சியளித்தது. இந்த மோதல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துவிசாரணை நடத்திவருகின்றனர். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.