தீபாவளி நாளில் டெல்லியில் மிகவும் மோசமடைந்த காற்று மாசு..!!
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாட பட்டுள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகையோட்டிக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் தீபாவளி கொண்டாட தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுபோல் தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டது. மீறி வெடித்தால் ரூ.200 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லியில் ஜனவரி 1, 2023 வரை பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியின் காற்றின் தரத்தின் சராசரி தரவுகளின்படி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரக் குறியீடு 312 அதாவது ‘மிகவும் மோசமான’ வகை இருந்ததாக தெரிவித்துள்ளது. தீபாவளி நாளான நேற்று உலகிலேயே மிகவும் மாசுபட்ட நகரமாக டெல்லியும், அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் லாகூரும் பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு தீபாவளியன்று (நவம்பர் 4, 2021) டெல்லியின் காற்றின் தரம் ‘மிகவும் மோசமான’ பிரிவில் (காற்றின் தரக் குறியீடு 382) இருந்தது. மேலும் டெல்லியின் நெருங்கிய நகரங்களான காஜியாபாத் (301), நொய்டா (303), கிரேட்டர் நொய்டா (270), குருகிராம் (325) மற்றும் ஃபரிதாபாத் (256) ஆகியவை மோசமான காற்றின் தரம் மற்றும் மிக மோசமான காற்றின் தரத்தைப் பதிவு செய்துள்ளன.