பொங்கலுக்கு தமிழ் கைதிகள் விடுதலை : மனோவிடம் ஜனாதிபதி தெரிவிப்பு !!
கொழும்பில் ஆங்காங்கே சில இடங்களில் இன்னமும் பொலிஸ் பதிவு பத்திரங்கள் விநியோகம் நடக்கிறது என நான் ஜனாதிபதி ரணிலுக்கு கூறியதை தொடர்ந்து இதுபற்றி பொலிஸ் மாஅதிபரை அழைத்து கூறுகிறேன் என ஜனாதிபதி எனக்கு பதிலளித்தார். அதேபோல், பொங்கல் பண்டிகை காலத்தில் இன்னமும் ஒரு தொகுதி தமிழ் கைதிகளை விடுவிக்க தான் எண்ணியுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் தெரிவித்தார் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் கொழும்பு மாவட்ட எம்பி மனோ கணேசன் கூறினார்.
ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி ரணில் தலைமையில் நேற்று (24) அரச தீபாவளி விழா நடைபெற்றது. இதில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் டக்லஸ் தேவானந்தா, மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்பீக்கள் சாகல ரத்னாயக்க, ஆர். யோகராஜன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடை சட்டம் நடைமுறையாவது இடை நிறுத்தம் செய்யப்பட வேண்டும் எனவும், ஆனால், தமிழ் கைதிகள் விடுவிப்புக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது எனது நிலைப்பாடு என நான் ஜனாதிபதியிடம் கூறினேன். ஐந்து முதல் இருபது வருடங்கள் வரை சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள் பிரச்சினை விசேடமாக கருதப்பட வேண்டும் என வலியுறுத்தினேன். சிங்கள மக்கள் மத்தியில், தமிழ் கைதிகள் விடுவிப்பு தொடர்பில் சாதகமான எண்ணப்பாடு இன்று நிலவுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் எம்.பி சாகல ரத்னாயக்க ஆகியோரும் கூறினர்.
மலையக மக்கள் மத்தியிலான, பெருந்தோட்ட பிரிவினர் பற்றி நான் பாராளுமன்றத்தில் கொண்டு வந்த பிரேரணை பற்றி ஜனாதிபதி அறிந்திருந்தார். பெருந்தோட்ட பகுதிகளிலேயே 51 விகித உணவின்மை பிரச்சினையும், இதையடுத்தே, நகரங்களில் 43 விகிதமும், கிராமங்களில் 34 விகிதமும் உணவு பாதுகாப்பின்மை இருப்பதாக ஐ.நா நிறுவனங்கள் கண்டறிந்து கூறி இருப்பதை நான் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்தேன். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்க விசேட ஒதுக்கீட்டு திட்டம் ஒன்றையும், அவற்றை ஆராய ஜனாதிபதி செயலணி ஒன்றை அமைக்கவும் கோரினேன் என தெரிவித்துள்ளார்.