வவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு எதிராக விசாரணை!!
வவுனியாவில் போதை மருந்தினை கொள்வனவு செய்த தனியார் வைத்திய நிலையம் மற்றும் வைத்தியருக்கு எதிராக விசாரணை: பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர்
வவுனியாவில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்ததாக கூறப்படும் தனியார் வைத்தியசாலை மற்றும் வைத்தியர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.மகேந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவிலும் போதை மாத்திரைகள் தனியார் வைத்தியசாலை ஒன்றின் பெயரில் அரச வைத்தியர் ஒருவரால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் இன்று (25.10) ஊடகவியலாளர் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் மருந்து விற்பனை நிலையங்கள் மீது உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போது வவுனியாவில் உள்ள அரச வைத்தியர் ஒருவர் தனது தனியார் வைத்தியசாலையின் பெயரில் போதை மாத்திரைகளை கொள்வனவு செய்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் எமக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. குறித்த தகவல் வெளியாகியதை அடுத்து விடுமுறை நாட்களாக இருந்தமையால், தற்போது உடனடியாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரந்திய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் உணவு மற்றும் மருந்து பரிசோதகர்கள் இணைந்து இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வைத்தியசாலை, வைத்தியர் மற்றும் அவரிடம் இருந்து குறித்த போதை மாத்திரைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் தொடர்பில் தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த போதை மாத்திரை கொள்வனவு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றமையால் வடமாகாண சுகாதா சேவைகள் திணைக்களம் இரண்டு மாவட்டங்களையும் உள்ளக்கி விசாரணை செய்ய விசேட குழு ஒன்றை நியமித்துள்ளது. விசாரணைகள் நிறைவடைந்த பின் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.