கார்கில் எல்லையில் சீருடை அணிந்து தமிழக ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி..!!
தீபாவளி பண்டிகை நேற்று உலகெங்கும் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகை அன்று பிரதமர் மோடி இந்திய எல்லையில் காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் ராணுவத்தினருடன் தீபாவளி கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையான நேற்று அவர் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். பின்னர் அவர் காஷ்மீர் மாநிலம் சென்றார். ராணுவ சீருடை அணிந்து கார்கில் எல்லை பகுதிக்கு சென்ற அவர் அங்கு பணியில் இருந்த ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தமிழக ராணுவ வீரர்கள், சுராங்கனி என்ற புகழ்பெற்ற தமிழ் பாடலை உற்சாகமாக பாடி ஆடினர். கிட்டார் இசைத்தும், டிரம்ஸ் வாசித்தும் அவர்கள் நடனமாடியபடி பாடிய பாடலை பிரதமர் மோடியும் உற்சாகமாக கேட்டு ரசித்தார். பின்னர் அவர் தமிழக ராணுவ வீரர்கள் அனைவருக்கும் தனது கைகளால் இனிப்பு ஊட்டி வாழ்த்து கூறினார். தொடர்ந்து அவர் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசியதாவது:- இந்திய எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்களால் தான் நாம் நிம்மதியாக பண்டிகைகளை கொண்டாடுகிறோம். இந்தியா ஒருபோதும் போரை விரும்பியது இல்லை. அதே நேரம் நமது வலிமையை காட்ட தவறியதும் இல்லை. இங்கு காவல் பணியில் ஈடுபட்டிருக்கும் வீரர்கள் தான் காவல் தெய்வங்கள். அவர்கள் தான் எனது குடும்பத்தினர். அவர்களுடன் இணைந்து தீபாவளியை கொண்டாடுவதில் மகிழ்ச்சிஅடைகிறேன். இவ்வாறு அவர் கூறினார். எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடியது பற்றி பிரதமர் மோடி டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் தமிழக ராணுவ வீரர்களின் இசை ஆர்வத்தையும், அவர்கள் பாடிய சுராங்கனி பாடலையும் பாராட்டியுள்ளார். அந்த பாராட்டில் தமிழக வீரர்களின் அற்புதமான செயல் நம்மை எல்லாம் வியக்க வைத்து விட்டது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தமிழக ராணுவ வீரர்கள் பாட்டு பாடும் காட்சியையும், அவர்களுக்கு இனிப்பு ஊட்டும் படங்களையும் பதிவிட்டுள்ளார்.