நரபலி கொடுக்கப்பட்ட 2 பெண்களின் டி.என்.ஏ. பரிசோதனை முடிவுக்கு காத்திருக்கும் போலீசார்..!!
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பத்மா மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த ரோஸ்லி என்ற 2 பெண்கள் கடத்தி நரபலி கொடுக்கப்பட்டனர். நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதில் எர்ணாகுளத்தை சேர்ந்த மந்திரவாதி முகமது ஷபி, இலத்தூரை சேர்ந்த பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களின் வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது அங்கிருந்து பத்மாவின் உடல் பாகங்களை கைப்பற்றினர். 56 துண்டுகளாக வெட்டப்பட்டு பிரிட்ஜில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மாமிசத்தை கைப்பற்றிய போலீசார் அவற்றை பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கைதான 3 பேரும் தங்களுக்கு 12 நாள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து கைதான 3 பேரிடமும் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் அவர்கள் மீதான குற்றச்சாட்டை உறுதிப்படுத்த கொலை செய்யப்பட்டவர்களின் உடல் பாகங்களை டி.என்.ஏ. பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். டி.என்.ஏ. பரிசோதனை முடிவு வந்ததும் போலீசாரின் விசாரணை தீவிரம் அடையும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக டி.என்.ஏ. பரிசோதனை முடிவுக்காக போலீசார் காத்திருக்கிறார்கள். அதன்பின்பு இந்த வழக்கில் மந்திரவாதிக்கு உதவிய நபர்கள் யார்? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது பற்றிய தகவல்களும் வெளியாகும் என தெரிகிறது. இதனால் இனி வரும் நாட்களில் இந்த வழக்கு மேலும் சூடு பிடிக்கும் என்று தெரிகிறது.