மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து- 700க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து நாசம்..!!
அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநகரில் உள்ள பழமையான மார்க்கெட்டில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், 700க்கும் மேற்பட்ட கடைகள் தீயில் கருகி சாம்பலாயின. மேலும் இந்த தீ விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். இட்டாநகர் அருகே உள்ள நஹர்லகுன் டெய்லி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீபாவளிக்கு வெடித்த பட்டாசு அல்லது வீட்டில் ஏற்றப்பட்ட விளக்கின் காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் இதனால், ரூ.3 கோடிக்கும் அதிகமான பொருட்கள் எரிந்து நாசமானதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மார்க்கெட்டில் உள்ள கடைகள் அனைத்தும் மூங்கில் மற்றும் மரக்கட்டைகளால் ஆனது. அங்குள்ள கடைகளில் ஏராளமான உலர் பொருட்கள் சேமித்து வைத்திருந்ததால் தீ சீக்கிரம் பிடித்துக் கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தீயணைப்பு நிலையம் சந்தைக்கு அருகே இருந்தும், தீயணைப்பு துறையினர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என பகுதிவாசிகள் குற்றம் சாட்டுயுள்ளனர். இதுகுறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க விரைந்தபோது அங்கு யாருமில்லை என்றும், தாமதமாக வந்த தீயணைப்பு துறையினர் போதிய தண்ணீர் கொண்டு வரவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். இதனால் மார்க்கெட்டின் பெரும்பகுதி தீயிக்கு இரையானது. இதையடுத்து, அலட்சியமாக பணியிலிருந்த அனைத்து தீயணைப்பு வீரர்களையும் பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அருணாச்சல வர்த்தக மற்றும் தொழில்துறையின் தலைவர் தர் நச்சுங் கோரிக்கை விடுத்துள்ளார்.