மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254 கோடி வருவாய்..!!
டெல்லி உள்பட மத்திய அரசின் அனைத்து துறைகளிலும் ‘சிறப்பு ஸ்வச்சதா’ என்ற பெயரில் 2-ம் கட்ட தூய்மை இயக்கம் நடத்தப்படுகிறது. கடந்த 2-ந் தேதி தொடங்கி வருகிற 31-ந்தேதி வரை நடைபெறும் இந்த பிரசாரத்தில் அனைத்து அரசு அலுவலகங்க வளாகங்களில் தேங்கி கிடக்கும் கழிவு பொருட்கள், குப்பைகளை அகற்றி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜிதேந்திரசிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- 2-வது கட்ட தூய்மை இயக்கத்தையொட்டி அனைத்து அரசு அலுவலகங்களிலும் கழிவுப்பொருட்கள் விற்பனை நடந்து வருகிறது. இதற்கான விதிமுறைகள் எளிதாக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றதாக கருதப்படுபவை நீக்கப்படுகின்றன. அந்த வகையில் இதுவரை 40 லட்சம் கோப்பைகள் ஆய்வு செய்யப்பட்டு தேவையற்றவை நீக்கப்பட்டதால் 37.19 லட்சம் சதுர அடி காலியாகி உள்ளது. இந்த பணிகளில் மின்னணு கோப்புகள் உள்பட 40.52 லட்சம் கோப்புகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அத்துடன் கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் ரூ.254.21 கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும் 588 விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதேபோல 3,05,268 மக்கள் குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.