காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார் மல்லிகார்ஜூன கார்கே- மூத்த தலைவர்கள் வாழ்த்து..!!
அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய காங்கிரஸ் தலைவர் தேர்தல் கடந்த 17-ந் தேதி நடந்தது. இந்த பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜூன கார்கே- திருவனந்தபுரம் எம்.பி. சசிதரூர் ஆகியோர் போட்டியிட்டனர். கடந்த 19-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் மல்லிகார்ஜூன கார்கே வெற்றி பெற்று புதிய காங்கிரஸ் தலைவரானார். அவருக்கு 7,897 வாக்குகள் கிடைத்தது.
சசிதரூர் 1,072 ஓட்டுகள் பெற்றார். மல்லிகார்ஜூன கார்கே இன்று முறைப்படி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்பார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அவர் காலையில் ராஜ்காட் பகுதியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி, இந்திரா காந்தி, ராஜீவ்காந்தி மற்றும் முன்னாள் துணை பிரதமர் ஜெகஜீவன் ராம் ஆகியோரது நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் மல்லிகார்ஜூன கார்கே டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அங்கு அவர் முறைப்படி தலைவராக பொறுப்பேற்கும் விழா நடந்தது. மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மல்லிகார்ஜூன கார்கேவிடம் மத்திய தேர்தல் குழு தலைவர் மது சூதனன் மிஸ்திரி வழங்கி னார்.
கட்சியின் தலைவர் பதவியை விட்டு சென்ற சோனியா காந்தி அவரிடம் முறைப்படி தலைமை பொறுப்பை ஒப்படைத்தார். மல்லிகார்ஜூன கார்கே காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற நிகழ்ச்சியில் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கார்கேவுக்கு சோனியா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பூச்செண்டு கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர்.
24 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்ற நேரு-காந்தி குடும்பத்தை சாராத நபர் கார்கே ஆவார். மறைந்த தலைவர் ஜெகஜீவன் ராமுவுக்கு பிறகு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற 2-வது தலித் சமூக தலைவர் கார்கே ஆவார். கடைசியாக காங்கிரஸ் தலைவராக இருந்த நேரு- காந்தி குடும்பத்தை சாராத நபர் சீதாராம் கேசரி ஆவார். இவர் கடந்த 1998-ல் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு சோனியா காந்தி தலைவர் பொறுப்பை ஏற்றார்.
2017 முதல் 2019 வரை ராகுல் காந்தி தலைவராக இருந்தார். காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றுள்ள மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பல சவால்கள் காத்திருக்கின்றன. உள்கட்சி பூசல், குஜராத், இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் உள்ளிட்ட சவால்கள் அவருக்கு காத்திருக்கின்றன. கட்சியில் அமைப்பு ரீதியிலான சீர்திருத்தங்களை முழு வீச்சில் செயல்படுத்த வேண்டிய பொறுப்பும் கார்கேவுக்கு இருக்கிறது.