ஆர்டர் செய்தது லேப்டாப்.. வந்ததோ..? தொடரும் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி..!!
பிரபல ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், தீபாவளிக்கு பல கவர்ச்சி ஆஃபர்களை அறிவித்து வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் இழுத்தது. ஏராளமான வாடிக்கையாளர்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்கினர். அப்படி ஒருவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் ஒன்றினை ஆர்டர் செய்ய அவருக்கு வந்த பொருள்தான் தற்போது இணையதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது.
கர்நாடக மாநிலம் மங்களூருவைச் சேர்ந்த சின்மைய ரமணா என்பவர் பிளிப்கார்ட் தளத்தில் லேப்டாப் வாங்குவதற்காக ஆர்டர் செய்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பார்சல் ஒன்று டெலிவரி செய்யப்பட்டது. ஆர்வத்துடன் அந்த பார்சலை திறந்து பார்த்தபோது அவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பார்சல் பெட்டிக்குள் லேப்டாப்புக்கு பதிலாக ஒரு கல்லும் பழைய கம்ப்யூட்டரின் உடைந்த உதிரி பாகங்களும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து பிளிப்கார்ட் நிறுவனத்திற்கு உடனடியாக மெயில் அனுப்பி இருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக சமூக வலைதளங்களிலும் அவர் பதிவிட்டுள்ளார். ஏற்கனவே இது போன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளதாக நெட்டிஷன்கள் ப்ளிப்கார்ட் நிறுவனத்தை திட்டி தீர்த்துள்ளனர். இதையடுத்து ரமணாவுக்கு முழு பணத்தையும் திருப்பித் தருவதாக பிளிப்கார்ட் நிறுவனம் பதில் அளித்துள்ளது. இனிமேல் இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வதாகவும் கூறியுள்ளனர்.