நோயாளிக்கு செலுத்தியது சாத்துக்குடி ஜூஸ் அல்ல… உ.பி. அதிகாரி விளக்கம்..!!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு தனியார் மருத்துவமனையில் ரத்த பிளேட்லெட்டுக்குப் பதில் சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். போலி ரத்த பிளேட்லெட்டுகள் விற்பனை செய்ததாக கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த நோயாளி உயிரிழந்ததையடுத்து, மருத்துவமனையில் இருந்த நோயாளிகள் அனைவரும் அங்கிருந்து மாற்றப்பட்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், இது தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சாத்துக்குடி ஜூஸ் ஏற்றப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டை மாவட்ட கலெக்டர் மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம். நோயாளிக்கு மோசமாகப் பாதுகாக்கப்பட்ட பிளேட்லெட்டுகள் கொடுக்கப்பட்டிருப்பதாக அவர்கள் அறிக்கை அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என்றார்.
இதேபோல் மருத்துவமனை நிர்வாகமும் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளது. பிளேட்லெட்டுகள் நோயாளிகளின் உறவினர்களால் வாங்கப்பட்டதாக கூறியுள்ளது. ‘நோயாளியின் ரத்த பிளேட்லெட் அளவு 17,000 ஆகக் குறைந்ததைத் தொடர்ந்து அவரது உறவினர்களிடம் ரத்த பிளெட்லெட்டுகளை ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டோம்.
அவர்கள் ஒரு அரசு மருத்துவமனையில் இருந்து ஐந்து யூனிட் பிளேட்லெட்களைக் கொண்டு வந்தனர். மூன்று யூனிட்களை நோயாளிக்கு ஏற்றிய பிறகு, நோயாளிக்கு பக்கவிளைவு ஏற்பட்டது. எனவே நாங்கள் மேற்கொண்டு ஏற்றுவதை நிறுத்தினோம்,” என மருத்துவமனை உரிமையாளர் கூறி உள்ளார். மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.