எரிவாயு விலைக் குறைப்பு குறித்து லிட்ரோவின் அறிவிப்பு!!
எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்யத் தயங்குவதாகத் தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், புதிய எரிவாயு தொகுதிகள் துறைமுகங்களை அடையும் வரை, எதிர்வரும் மாதங்களில் எரிவாயு விநியோகம் இருக்காது எனும் வதந்திகளை பரப்ப ஆரம்பித்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
எரிவாயுத் திருத்தம் குறித்த மற்றோர் அறிவிப்பு, சனிக்கிழமை (29) வெளியிடப்படும் என்றும் உலக சந்தை நிலவரம் கடந்த மாதத்தைப் போலவே உள்ளதால், அதைக் கொண்டு தற்போதைக்கு விலைகளை கணிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேற்றையதினம் (27) வரை உலக சந்தையின் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என்று தெரிவித்த அவர், சில சந்தர்ப்பங்களில் எரிவாயு விலைகள் குறையாமல் அல்லது கூடாமல் அப்படியே நின்று விடுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தேவைக்கேற்ற எரிவாயு கையிருப்பில் உள்ளதாகவும் எனினும் நட்டம் ஏற்படும் என்று அஞ்சும் விநியோகஸ்தர்கள், சிலிண்டர்களை கொள்வனவு செய்து சேமிக்கத் தயங்குகின்றனர் என்றார்.
சில விநியோகஸ்தர்களின் நடத்தை குறித்து நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தேவையான பங்குகள் அனுப்பப்பட்டு பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஓமானில் இருந்து 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை கொண்டுவரும் கப்பல் இன்று மாலை நாட்டை வந்தடையும் என்றும் நவம்பர் 2 மற்றும் 6ஆம் திகதிகளிலும் எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையும் என்றும் பீரிஸ் மேலும் தெரிவித்தார்.