திலினியால் ரூ.128 கோடி மோசடி: 12 முறைப்பாடு!!
பாரிய பண மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலி, 128 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக 12 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ, இன்று (27) தெரிவித்தார்.
பல அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட பிரபலங்களிடம் எரிபொருள் இறக்குமதி செய்து இலாபம் ஈட்டித் தருவதாகக் கூறி பல கோடிகளை மோசடி செய்த குற்றச்சாட்டில், கடந்த 6ஆம் திகதி கைது செய்யப்பட்ட திலினி, நவம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரதான சந்தேகநபரான திலினியும் அவருடைய காதலன் என்று கூறப்படும் இசுரு பண்டாரவும் தன்னிடம் 60,000 அவுஸ்திரேலிய டொலர்கள், 100,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் ஒரு கிலோ கிராமுக்கும் அதிகமான தங்கத்தை மோசடி செய்துள்ளதாக கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர், சீ.ஐ.டியில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய இசுருவும கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும், திலினி பிரியமாலிக்கு எட்டரைக் கோடி ரூபாய் வழங்கியுள்ளதாக முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி சீ.ஐ.டியில் கடந்த 17ஆம் திகதி முறைப்பாடு செய்திருந்தார்.
நீதிமன்ற அனுமதியின் பேரில், உலக வர்த்தக மையத்தின் 34ஆம் மாடியில் அமைந்துள்ள திலினியின் அலுவலகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அழைத்துச் சென்ற சீ.ஐ.டியினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
சந்தேகநபர் விளக்கமறியலில் இருந்தபோது பல அலைபேசிகளைப் பயன்படுத்தியதாகவும், அவரை பிணையில் விடுவிக்க 3 கோடி ரூபாய் கோரி, நபர் ஒருவரை தொடர்பு கொண்டமை விசாரணைகளில் இருந்து தெரியவந்தாகவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சீ.ஐ.டியினர் அறிவித்திருந்தனர்.
அத்துடன், மோசடியான முறையில் பெறப்பட்ட பணத்தில் வருமானம் ஈட்டாமல், சந்தேகநபர் எவ்வாறு 41 இலட்சம் ரூபாயை மாதாந்தம் செலவிட்டார் என்பது விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக சீ.ஐ.டியினர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.