கல்முனை பிரதேச செயலாளருக்கு மாநகர சபையில் மருதமுனை மக்களின் சார்பாக நன்றி தெரிவிப்பு!!!
கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலிக்கு கல்முனை மாநகர சபையில் மருதமுனை மக்களின் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபையின் 55 ஆவது அமர்வு கடந்த புதன்கிழமை(26) மாலை கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதன் போது விசேட உரை ஒன்றினை நிகழ்த்திய கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஆர் அமீர்(ஜே.பி) கடந்த கால அமர்வுகளில் மருதமுனை மேட்டுவட்டை பகுதியில் மையவாடி அமைக்க கல்முனை மாநகர சபையில் தீர்மானம் மேற்கொண்டிருந்தோம்.மருதமுனை பிரதேசத்தில் சுனாமி அனர்த்தத்தினால் வீடு வாசல்களை இழந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக மேட்டுவட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீட்டுத்திட்டங்களில் குடியிருக்கும் மக்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்காக மையவாடி இன்மையினால் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக சக உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் சகல தரப்பினரதும் ஒத்துழைப்பினை கோரி இருந்தோம்.
இதற்கமைய இவ்விடயம் தொடர்பிலான பிரேரணையை சக மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.உமர் அலி சமர்ப்பித்திருந்துடன் நான் இதனை வழிமொழிந்து உரையாற்றி இருந்தேன்.குறித்த சுனாமி வீட்டுத்திட்டங்களில் வாழ்கின்ற மக்களின் நீண்ட காலத் தேவையாக இருந்து வருகின்ற மையவாடியை அவர்களது நலன்களை கருத்தில் கொண்டு அப்பகுதியிலேயே ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகுமென இதன்போது வலியுறுத்தி கல்முனை மாநகர சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு கல்முனை பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இந்த விடயத்தை உடனடியாக கவனமெடுத்து குறித்த மையவாடிக்கான 3 ஏக்கர் காணியை பெற நடவடிக்கை மேற்கொண்ட கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலிக்கு மருதமுனை மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவிப்பதுடன் குறித்த மையவாடிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் மிக விரைவில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”