திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நிகழ்வுகள்..!!
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது கந்தசஷ்டி திருவிழா. கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கியது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. மாலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜைகள் நடந்தது. விழாவின் 2-ம் நாளான 26-ந்தேதி முதல் 5-ம் நாளான 29-ந்தேதி வரையிலும் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 4 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. யாகசாலை பூஜை ஆரம்பமாகியது. யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள்களுக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம் அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் கிரி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். 6-ம் நாளான வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடக்கிறது. அன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 6.45 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. மதியம் 12 மணிக்கு யாகசாலையில் தீபாராதனை நடக்கிறது. மதியம் 12.45 மணிக்கு யாகசாலையில் இருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முக விலாச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் சுவாமிக்கு தீபாராதனை நடக்கிறது. மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடக்கிறது. இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள். 7-ம் நாளான 31-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 11 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 3.30 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 1 மணிக்கு மற்றகால பூஜைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அம்பாள் தபசு காட்சிக்கு புறப்படுதல், 6.30 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு மாலை மாற்றும் வைபவம் நடைபெற்று அன்று இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.