மத்திய மந்திரி எல்.முருகன் ஜம்மு காஷ்மீர் பயணம்- அமிர்த ஏரிகள் திட்டத்தை தொடங்கி வைத்தார்..!!
மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து காஷ்மீர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகவும் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி எல். முருகன், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ளார்.
குல்காம் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 75 நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்கும் அமிர்த ஏரிகள் திட்டத்தை அவர் தொடங்கி வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளுடன், வளர்ச்சித் திட்டப் பணிகளின் செயல்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் முழுமையான வளர்ச்சிப்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு மத்திய அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது என்றார். குல்காம் மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த நடவடிக்கையின் மூலம், இப்பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தொடர்ந்து உள்ளூர் மீன் வளர்ப்போருடன் அவர் கலந்துரையாடினார். அப்பகுதியில் உள்ள மீன்வளர்ப்புப் பண்ணைகளையும் அவர் பார்வையிட்டார். உள்நாட்டு மீன் வளர்ப்புக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பலனடைய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.