சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.320 கோடியில் தலைமை அலுவலகம்..!!
சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண நேரத்தை குறைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்துக்கு கடந்த 2007-ம் ஆண்டு கருணாநிதி தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் போது ஒப்புதல் அளிக்கப்பட்டது.
2015-ம் ஆண்டு முதல் சேவை
கடந்த 2009-ம் ஆண்டு மு.க.ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக இருந்த போது மெட்ரோ ரெயில் திட்டத்தின் கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ஆலந்தூர்-கோயம்பேடு இடையேயான பணிகள் முடிக்கப்பட்டு இந்த வழித்தடத்தில் முதன்முறையாக 2015-ம் ஆண்டு ஜூன் 29-ந் தேதி ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இதன்பின்பு ஒன்றன் பின் ஒன்றாக பணிகள் நிறைவடைந்து சென்னை சென்டிரல்-பரங்கிமலை, சென்னை சென்டிரல்-விமான நிலையம், சென்னை விம்கோநகர்-விமான நிலையம் ஆகிய வழித்தடங்களில் சுமார் 55 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது.
2-ம் கட்ட பணி
இந்த வழித்தடங்களில் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை 42 மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன. 15 பெண்கள் உள்பட 180 பேர் மெட்ரோ ரெயில் டிரைவர்களாக பணியாற்றி வருகின்றனர். சராசரியாக தினமும் 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்கின்றனர்.
2-ம் கட்டமாக மாதவரம்-சிப்காட், ஆயிரம்விளக்கு-பூந்தமல்லி, மாதவரம்-சோழிங்கநல்லூர் ஆகிய 3 வழித்தடங்களில் 119 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயிலை இயக்கும் வகையில் 63 ஆயிரத்து 246 கோடி ரூபாய் செலவில் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் 2026-ம் ஆண்டு இறுதியில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெட்ரோ ரெயில் நிர்வாக தலைமை அலுவலகம் கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரெயில் இயக்க கட்டுப்பாட்டு அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வந்தது.
ரூ.320 கோடியில் தலைமை
அலுவலகம் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் நந்தனம் அண்ணா சாலையில் 8.96 ஏக்கர் நிலத்தில் புதிதாக தலைமை அலுவலக கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.320 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த தலைமை அலுவலக கட்டிடம் தனித்துவ வடிவமைப்பை கொண்டு அதிநவீன வசதிகளுடன் மிக பிரமாண்டமாக 12 மாடிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இங்கு முதல் கட்டத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரெயில் மற்றும் 2-ம் கட்டமாக இயக்கப்பட உள்ள மெட்ரோ ரெயில் ஆகியவற்றின் இயக்கங்களை கண்காணிக்க இயக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது பேரிடர் காலங்களில் ஏற்கனவே கோயம்பேட்டில் அமைந்துள்ள பிரதான இயக்க கட்டுப்பாட்டு மையத்தில் ஏதேனும் பழுது ஏற்படும் பட்சத்தில் இது நிழல் மையமாக செயல்படும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்
இந்த கட்டிடத்தின் நவீன வடிவமைப்பு தகவல் தொடர்பினை மேம்படுத்தும் வகையிலும், பூகம்ப நேரத்தில் ஏற்படும் பளு மற்றும் காற்றின் பாதிப்பினை குறைக்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளன. மின்சக்தியின் பயன்பாட்டை குறைக்க இயற்கையான வெளிச்சம் கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர மின்சார வாகனங்களுக்கு வாகன நிறுத்துமிடத்திலேயே சார்ஜிங் (மின்னேற்றம்) செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அதிநவீன வசதிகளை கொண்ட இந்த பிரமாண்ட கட்டிடத்தின் திறப்பு விழா சென்னை நந்தனத்தில் நேற்று நடந்தது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் அவர்கள், பிரமாண்ட கட்டிடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அதிநவீன வசதிகளை பார்வையிட்டனர்.
கலந்து கொண்டவர்கள்
முன்னதாக அவர்களை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் முதன்மை செயலாளர் எம்.ஏ.சித்திக், சிறப்பு முயற்சிகள் துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். விழாவில் அமைச்சர்கள் கே.என். நேரு, மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் தமிழச்சி தங்கபாண்டியன், ஆர்.கிரிராஜன் மற்றும் த.வேலு எம்.எல்.ஏ., துணை மேயர் மகேஷ் குமார், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மைச் செயலாளர் ஹிதேஸ் குமார் எஸ்.மக்வானா, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் சிறப்பு பணி அலுவலர் ஜெய்தீப், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் அர்ச்சுனன் (திட்டங்கள்), ராஜேஷ் சதுர்வேதி (இயக்கம் மற்றும் பராமரிப்பு) மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.