நிறையை கூட்டியதால் சரிபாதியாகும் சம்பளம்!!
பெருந்தோட்டக் கம்பனிகளில் சில, நாளாந்தம் பறிக்கவேண்டிய கொழுந்தின் நிறையை கூட்டியதால், தொழிலாளர்கள் பல்வேறான அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர் என ப்ரொடெக்ட் சங்கத்தின் உப-தலைவர் எம். மைத்திரி தெரிவித்துள்ளார்.
நாளாந்த சம்பளமாக 1,000 ரூபாவை வழங்குவதற்காக, நாளொன்றுக்கு 20 கிலோகிராம் நிறையைக்கொண்ட பச்சை தேயிலை கொழுந்தை பறிக்கவேண்டுமென சில நிறுவனங்கள் கட்டாயப்படுத்தியுள்ளன.
இதனால் உரிய சம்பளத்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஹட்டனில் உள்ள அந்த சங்கத்தின் காரியாலயத்தில் ஒக்டோபர் 26ஆம் திகதியன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நாளொன்றுக்கான 1,000 ரூபாய் சம்பளத்தை பெறவேண்டுமாயின் அந்த நாளில் 20 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறிக்கவேண்டும். எனினும், சில தோட்டங்களில் அது இயலாத காரியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தோட்டங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை. நாட்டில் ஏற்பட்டிருக்கும் சீரற்ற வானிலையால் கொழுந்துகள் முறையாக வளர்வதில்லை. முறையாக பசளையிடுவதும் இல்லை. ஆகையால், பாரிய அசௌகரியங்களுக்கு தொழிலாளர்கள்
முகங்கொடுத்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் இவ்வாறான அசௌகரியங்களுக்கு தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அந்த தோட்டக் குடும்பங்களும் பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.