தத்தளிக்கும் பஸ்கள் தடுமாறும் பயணிகள்!!
ஹட்டன் நகரிலுள்ள பிரதான பஸ் நிலையத்துக்கு செல்லமுடியாத நிலைமையே பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது பஸ்களுக்கும் தள்ளாடி, தட்டுதடுமாறி, நிலையங்களுக்கு சென்று, திரும்புகின்றன என பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
மழைக்காலங்களில் குழிகளில் நீர் நிரம்பிநிற்கும். பஸ்கள் பணிக்கும் போதுகூட நடந்து செல்லும் பயணிகளால் ஒதுங்கி செல்லமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.
அவ்வாறு ஒதுங்கி சென்றாலும் வேகமாக செல்லும் பஸ்கள் சேற்று நீரை அள்ளி, உடைகளின் மீது வீசி, சேற்றை பூசிவிடுகின்றன என பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சேற்றுக்குழிக்குள் பஸ்கள் விழுந்து விடாத வகையில் செலுத்திச் செல்வது என்பது கடினமாக காரியமாகுமென இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்களின் சாரதிகள் பலரும் தெரிவிக்கின்றனர்.
பல வருடங்களாக இந்த தரிப்பிடத்துக்குச் செல்லும் வீதிகள் குன்றும் குழியுமாகவே இருக்கின்றன. பலரின் கவனத்துக்கு கொண்டுவந்த போதிலும், நிலைமையை எவரும் கவனத்தில் எடுப்பதாய் இல்லை. மழைக்காலங்கள் என்றால் பயணிகளால் நடந்து செல்லமுடியாது. பஸ்களைக் கண்டு ஒதுங்குவதற்கு கூட பாதுகாப்பான இடமில்லை என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பயணிகள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களும், வெளி பிரதேசங்களில் இருந்து வந்துசெல்வோரும் கடுமையான அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.
ஆகையால் மழைக்காலம் ஓய்ந்ததும், குன்று, குழிகளை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென உரிய தரப்பினருக்கு பாதிக்கப்பட்டோர் வலியுறுத்துகின்றனர்.