;
Athirady Tamil News

ஹாசனாம்பா கோவில் நடை அடைப்பு: டிக்கெட், பிரசாதம் மூலம் ரூ.2 கோடி வருவாய்..!!

0

ஹாசனில் பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ஆண்டுதோறும் தீபாவளியையொட்டி மட்டும் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். இங்கு கோவில் நடை அடைக்கும்போது ஏற்றப்படும் விளக்கு அணையாமல் இருக்கும் என்றும், பூக்கள் மற்றும் பிரசாதம் கெட்டு போகாமல் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இந்த ஆண்டும் கடந்த 13-ந்தேதி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டது.

13-ந்தேதி முதல் 27-ந்தேதி (நேற்று) வரை 15 நாட்கள் கோவில் நடை திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. முதல் நாள் கோவிலை சுத்தம் செய்யப்பட்டதால், பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதையடுத்து மறுநாள் 14-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கர்நாடகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். மந்திரிகள், அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்களும் ஹாசனாம்பா கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

முதல் நாள் (13-ந்தேதி) மற்றும் சூரிய கிரகணத்தையொட்டி 25-ந்தேி ஆகிய 2 நாட்கள் மட்டும் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கடைசி நாளான நேற்று காலை 8 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பின்னர் மதியம் 12 மணி அளவில் ஹாசனாம்பா கோவிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மாவட்ட பொறுப்பு மந்திரி கோபாலய்யா, பிரீத்தம் கவுடா எம்.எல்.ஏ., போலீஸ் சூப்பிரண்டு ஹரிராம் சங்கர் ஆகியோர் முன்னிலையில் கோவில் நடை அடைக்கப்பட்டது. முன்னதாக ஹாசனாம்பாவுக்கு சிறப்பு பூஜை செய்து, தீபம் ஏற்றப்பட்டது.

பின்னர், பூக்களால் அலங்காரமும் செய்யப்பட்டது. ஹாசனாம்பாவுக்கு பிரசாதமும் படைக்கப்பட்டது. ஹாசனாம்பா கோவிலில் ரூ.1,000, ரூ.300-க்கான சிறப்பு தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் வினியோகம் செய்யப்பட்டது. டிக்கெட் கட்டணம், பிரசாதம் மூலம் ரூ.2 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மந்திரி கோபாலய்யா தெரிவித்துள்ளார். மேலும் 13 நாட்களிலும் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்டோர் கோவிலில் சாமி தரிசனம் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.