;
Athirady Tamil News

பா.ஜ.க., டி.ஆர்.எஸ். இரு கட்சிகளும் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகின்றன – ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!!

0

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானா மாநிலத்தில் ஒற்றுமை யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகிறார். தீபாவளிக்கு 3 நாள் விடுமுறைக்குப் பிறகு, நேற்று மக்தல் சட்டமன்றத் தொகுதியின் குடேபெல்லூரில் இருந்து யாத்திரை மீண்டும் தொடங்கியது. குடேபெல்லூரில் இருந்து நாராயண்பேட்டை மாவட்டம் யெலிகண்ட்லா வரை 26.7 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடந்தார். அப்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், தெலுங்கானா காங்கிரஸ் செயல் தலைவரான முகமது அசாருதீன் ராகுல் காந்தியைச் சந்தித்து அவருடன் கைகோர்த்து நடை பயணத்தை மேற்கொண்டார். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது: மாநிலத்திலும் மத்தியிலும் டி.ஆர்.எஸ். (ராஷ்டிர சமிதி கட்சி) மற்றும் பா.ஜ.க. இணைந்து செயல்படுகிறது. டி.ஆர்.எஸ். மற்றும் பா.ஜ.க. அரசுகளின் கொள்கைகளால் வேலையின்மை மற்றும் பணவீக்கம் அதிகரித்துள்ளது. டெல்லியில் டி.ஆர்.எஸ். பா.ஜ.க.வுக்கு உதவுகிறது, மேலும் மாநிலத்தில் டி.ஆர்.எஸ்.ஸுக்கு பா.ஜ.க. ஆதரவளிக்கிறது. இந்த 2 கட்சிகளும் ஜனநாயகத்திற்கு எதிரானவை. டி.ஆர்.எஸ் மற்றும் பா.ஜ.க ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். தெலுங்கானா மக்கள் எம்எல்ஏக்கள் விலைக்கு வாங்க பேரம் பேசப்படும் நிகழ்வை புரிந்து கொள்ள வேண்டும் பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்திய அனைத்து மசோதாக்களையும் டிஆர்எஸ் முழுமையாக ஆதரித்தது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் கொண்டு வந்த தீர்மானத்தை டிஆர்எஸ் ஆதரிக்கவில்லை. நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த மாநிலம் டிஆர்எஸ் தலைமையிலான தெலுங்கானாதான். ஆட்சியைக் கவிழ்க்க இரு கட்சிகளும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதால், டிஆர்எஸ் மற்றும் பா.ஜ.க. ஒன்றுக்கொன்று வேறுபட்டதல்ல என தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.