;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் அதிகரிக்க என்ன காரணம்?- பாதுகாப்புத்துறை மந்திரி விளக்கம்..!!

0

நாட்டின் எல்லையில் உள்ள சாலைகளை மேம்படுத்தும் அமைப்பான பி.ஆர்.ஓ 75 உள்கட்டமைப்பு திட்டங்களை உருவாக்கியுள்ளது. 45 பாலங்கள், 27 சாலைகள், 2 ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் உள்ளிட்ட 75 திட்டங்கள், அருணாச்சலப்பிரதேசம் உத்தராகண்ட், சிக்கிம், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் லடாக், ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன.

நிறைவு பெற்ற இந்த திட்டங்களை லடாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டின் பாதுகாப்பு தேவையை பூர்த்தி செய்ய எல்லைப்பகுதிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது. இந்த புதிய 75 திட்டங்கள் இதற்கு சான்றாக அமைந்துள்ளன.

ஜம்மு காஷ்மீரில் சுதந்திரத்திற்கு பின்னர் பல ஆண்டுகளாக உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படவில்லை. அங்கு பயங்கரவாதம் அதிகரிக்க இதுதான் காரணம். இந்த இடையூறுகள் காரணமாக சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்து லடாக் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு நாடு முழுவதும் எதிரொலித்தது. இப்போது அரசின் முயற்சிகள் காரணமாக அமைதி மற்றும் முன்னேற்றத்துடன் கூடிய புதிய உதயத்தை இங்கு காண முடிகிறது.

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வளர்ச்சியை தொடர்வதே மத்திய அரசின் நோக்கம். நாட்டின் அனைத்து தொலை தூரப்பகுதிகளையும் பிற பகுதிகளுடன் விரைவில் இணைப்பதன் மூலம் நாட்டுக்கு புதிய உச்சத்தையும், முன்னேற்றத்தையும் அளிக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.