அரிசி விலை சீராக உள்ளது- மத்திய மந்திரி பியூஷ் கோயல்..!!
தெலுங்கானா மாநில வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில் ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய உணவு அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளதாவது: உலகம் முழுவதும் இன்று பொருளாதார நெருக்கடி உள்ளது. இந்த நிலையில் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும். உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் உணவு தானியங்களின் உற்பத்தி குறையக்கூடும் என்ற அச்சம் இருக்கிறது. சரியான நேரத்தில் மழை பெய்யாத நிலையில் இன்னும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. ஒரு நபருக்கு 5 கிலோ வீதம் 80 கோடி மக்கள் அரிசி, கோதுமையை பெற்று வருகிறார்கள். அந்தியோதயா திட்டத்தின் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 35 கிலோ உணவு தானியம் வழங்கப்படுகிறது. பிரதமரின் ஏழைகளுக்கான இலவச உணவு பொருள் திட்டத்தின் கீழ் கூடுதலாக 5 கிலோ வழங்கப்படுகிறது. கூடுதல் விநியோகத்திற்காக ஒவ்வொரு மாதமும் 90 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவை. ஒரு வருடத்தில் தேவை 108 லட்சம் டன்களாகிறது. ஏழை எளிய மக்கள் உணவு பொருட்களை இலவசமாகப் பெறுகிறார்கள். அரிசியின் விலை சீராக உள்ளது, எனவே உணவு தானிய ஏற்றுமதியை அரசு நிறுத்தவில்லை. செப்டம்பர் வரை, முதல் ஆறு மாதங்களில் ஏற்றுமதி சுமார் 17 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.