ஈரான் வழிபாட்டு தலம் துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் பலி – இந்தியா கடும் கண்டனம்..!!
ஈரானில் ஹிஜாப் பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 17-ம் தேதி போலீஸ் விசாரணையின்போது மாஷா அமினி (22) என்ற இளம் பெண் உயிரிழந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் ஈரானிய பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிரான இந்தப் போராட்டத்தின் 40-வது நாளில் அந்நாட்டின் 2-வது புனிதத் தலமான ஷா செராக் மசூதிக்குள் புகுந்து மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 15 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் காயமடைந்துள்ளனர் என அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்திய இருவர் கைது செய்யப்பட்டனர் என ஈரான் நீதித்துறை தெரிவித்துள்ளது. மேலும், இந்த தாக்குதலில் வெளிநாட்டினருக்கு தொடர்பு இருக்கலாம் என ஈரானிய செய்தி இணையதளம் கூறியுள்ளது. இந்நிலையில், ஈரானின் ஷிராஸ் நகரில் உள்ள ஷா-இ-செராக் கோவில் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.