;
Athirady Tamil News

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன்!!

0

மலையக மக்களுக்கு ரணசிங்க பிரேமதாச, குடியுரிமையை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தார். அது ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சிறுதோட்ட உடமையாளர்களாக்கப்படுவார்கள். அதன்மூலம் ஏற்றுமதி பொருளாதாரமும் மேம்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் “பிரபஞ்சம்” எனும் திட்டத்தின் கீழ் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் அமைந்துள்ள கேம்பிரிட்ஜ் கல்லூரிக்கு இன்று (29) காலை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பாடசாலை பஸ் ஒன்றினை வழங்கி வைத்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த பஸ் கையளிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்கும் திட்டம் தொடர்பில் சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். சாத்தியமில்லை எனவும் கதை கட்டினர். அது தவறு, எமது ஆட்சியில் நிச்சயம் சிறுதோட்ட உரிமையாளர்கள் உருவாக்கப்படுவார்கள். ஏற்றுமதி துறையில் புரட்சி இடம்பெறும். தேயிலை பயிரிடக்கூடிய இடங்களை திரிசு நிலங்களாக வைப்பதில் பயன் கிட்டாது.

பெருந்தோட்ட மக்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவேன் என நான் கூறியபோது, எனக்கு எதிராக மொட்டு கட்சியினர் சேறுபூசினர். ஏளனம் செய்தனர இவர்கள்தான் உரத்துக்கு தடை விதித்து, பெருந்தோட்டத்துறைக்கு பெரும் தீங்கு விளைவித்தனர். பெருந்தோட்ட மக்களை இருளுக்குள் தள்ளிய இவர்கள்தான், இனவாதத்தை கையில் எடுத்தனர். பெருந்தோட்ட மக்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டு மக்களையுமே இவர்கள் குழிக்குள் தள்ளினர்.

இவ்வாறு நாட்டு மக்களை துன்பத்துக்குள் தள்ளிவிட்டு, சாம்பல் மேட்டியில் இருந்து மீண்டெழுவோம் என தற்போது சூளுரைத்து வருகின்றனர். நாட்டை சாம்பலாக்கிவிட்டுதான் அவர்கள் மீண்டெழ பார்க்கின்றனர். அவர்களின் மீள் எழுச்சி மக்களின் கைகளில்தான் உள்ளது என்பதை மறந்துவிடக்கூடாது.

நாட்டு வளங்களை சூறையாடிய, நாட்டை வங்குரோத்து அடைய செய்து, தமது குடும்பத்தை செல்வந்தர்களாக்கியவர்களுக்கு மீண்டெழும் வாய்ப்பை மக்கள் வழங்குவார்களா?

நாட்டில் தற்போது உள்ள அரசாங்கமும் வங்குரோத்து அரசாங்கம்தான். அதனால்தான் மக்கள்மீது வரிசுமை திணிக்கப்படுகின்றது. எமது நாட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் எமது ஆட்சியில் மீளப்பெறப்படும். களவாடப்பட்ட சொத்துகள் நாட்டுக்கு கொண்டுவரப்படும். இதற்கு தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.