அரசியலமைப்பு பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரை செய்யும் போது நேர்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட வேண்டும் : ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி!!
அண்மையில் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டிருக்கும் அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தத்தின் பிரகாரம் அரசியலமைப்புப் பேரவை மற்றும் அதனைத்தொடர்ந்து நியமிக்கப்படும் சுயாதீன ஆணைக்கழுக்கள் என்பன சுதந்திரமாகவும், யாருக்கும் பக்கச்சார்பற்ற வகையிலும் இயங்குவது அவசியமாகும் என்பதுடன் அவை சோஷலிச குடியரசு நாடு மற்றும் நாட்டிலுள்ள கட்டமைப்புக்கள் மீதான நம்பிக்கையை இன்னும் வலுவாக உறுதிப்படுத்தும் விதமாக செயற்படவேண்டும் என ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா ஜனநாயக கட்சி சார்பில் அக்கட்சியின் தலைவர் கலாநிதி அன்வர் முஸ்தபா விடுத்துள்ள அறிக்கையில் மேலும், எமது நாட்டின் அரசாங்கத்தினால் இம்மாதம் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலமானது, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைவாக குழுநிலையின்போது மேற்கொள்ளப்பட்ட சில திருத்தங்களுடன் கடந்த 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டுக்கும் அதிகமான பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது நாட்டின் இன்றைய நிலைக்கு பொருத்தமானதாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
திடீரென எழுந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக நாட்டுமக்களிடம் வலுப்பெற்ற போராட்டங்களே இந்த அரசியலமைப்புத் திருத்தத்தை மேற்கொள்வதற்கான காரணமாக அமைந்தது. இதனால் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த திருத்தம் இலங்கையர்களை நிம்மதியாகவும், துன்புறுத்தலில்லாத வகையிலுமான வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும். இந்த திருத்தத்தில் 20 ஆவது திருத்தத்திற்கு முன்னர் காணப்பட்ட விடயங்கள் முழுமையாகப் பூர்த்திசெய்யவில்லை என்ற குறையுடன் நிறைவேற்றதிகார ஜனாதிபதிக்குரிய அதிகாரங்கள் தொடர்பில் உரியவாறான கடப்பாடுகள் மற்றும் மட்டுப்பாடுகளை விதிக்காமல் விட்டிருப்பது குறைபாடாக அமைந்துள்ளதாக பார்க்கின்றோம்.
22 ஆவது திருத்தத்தின் பிரகாரம் வலியுறுத்தப்பட்டுள்ள அரசியலமைப்புப்பேரவைக்கான உறுப்பினர்களைப் பரிந்துரைசெய்யும் போது அதன் நேர்மைத்தன்மையை உறுதிப்படுத்துமாறு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்கட்சித்தலைவர்களிடம் இவ்வேளையில் வலியுறுத்துகின்றோம்.
அதேவேளை அரசியலமைப்புப்பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் சுயாதீன ஆணைக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை வாய்ந்ததும் அனைவரையும் உள்ளடக்கியதுமான செயன்முறையை அப்பேரவை பின்பற்றவேண்டும் என்று சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ள விடயம் இங்கு கவனிக்கப்பட வேண்டும் என நாங்களும் வலியுறுத்துகின்றோம் என்றார்.