நவம்பர் 1 முதல் உணவு விலைகள் குறையும்!!
தேநீர் மற்றும் மேலும் சில உணவு வகைகளின் விலைகளை, நாளை மறுதினம் (01) முதல் 10 சதவீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
கோதுமை மாவின் விலை குறைந்துள்ளமை மற்றும் கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்ட கோழி இறைச்சி மற்றும் மீன் என்பவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்துள்ள காரணத்தால் உணவுகளின் விலைகளும் குறைக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் பண்டிகை காலம் மற்றும் பல விடயங்களை கருத்திற் கொண்டு புறக்கோட்டை மொத்த சந்தையில் சீனி, பருப்பு மற்றும் கோதுமை மா ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் சீனியின் மொத்த விலை 225 ரூபாயாகக் குறைந்துள்ளதுடன், 265 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட கோதுமை மாவின் மொத்த விலை 250 ரூபாயாக குறைந்துள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, கோதுமை மாவின் விலை 250 ரூபாயாக்கப்பட்டாலும் போதிய அளவில், மா இறக்குமதி செய்யப்பட்டாலும், அடுத்த வாரம் முதல் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை குறைக்கப்படும் என்றும்அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன, அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.