கோழிக்கோடு பகுதியில் கடல் நீர் திடீரென 50 மீட்டர் உள்வாங்கியதால் சுனாமி அச்சம்..!!
சுனாமி காலத்திற்கு பிறகு அடிக்கடி கடல் நீர் உள் வாங்குவதும், சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை. இங்கு பலரும் சுற்றுலாவாக வந்து செல்வதுண்டு. நேற்று மாலை இந்த கடற்கரைக்கு வந்தவர்கள், கடல் நீர் உள் வாங்கி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள் வாங்கி இருந்தது. இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பீதியடைந்தனர். ஆனால் இதனை கேரள மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் மறுத்துள்ளது. அரபிக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலில் நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை. எனவே கடல் நீர் உள்வாங்கியது குறித்து கவலைப்படத் தேவையில்லை என பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.