;
Athirady Tamil News

தீபத்திருவிழா அன்று திருப்பதி தேவஸ்தான கோவில்களில் லட்டு வினியோகம் செய்ய ஏற்பாடு..!!

0

திருமலை-திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தில் நேற்று தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி தலைமை தாங்கி பேசியதாவது:- திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட கோவில்களில் தீபத் திருவிழா நடத்தப்பட உள்ளது. வருகிற (நவம்பர்) 7-ந்தேதி யாகந்தியிலும், 14-ந்தேதி விசாகப்பட்டினத்திலும், 18-ந்தேதி திருப்பதியிலும் கார்த்திகை தீபத்திரு விழாவை வெற்றிகரமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அந்தக் கோவில்களில் ஸ்ரீவாரி லட்டுகள் மற்றும் திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் லட்டு பிரசாதங்களை தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும். தேவஸ்தான கோவில்களில் தேவஸ்தான வனத்துறை அதிகாரி துளசி செடிகளை நடவு செய்ய வேண்டும்.

ஸ்ரீவெங்கடேஸ்வரா இசை மற்றும் நடனக் கல்லூரியின் முதல்வர் கலாசார நிகழ்ச்சிகளையும், அன்னமாச்சாரியார் திட்ட இயக்குனர் சங்கீர்த்தன குழுக்களையும் அமைத்து பக்தி இசை நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். புனித கார்த்திகை மாதத்தின் முக்கியத்துவம் மற்றும் அந்த மாதத்தில் பக்தர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய தகவல்கள் அடங்கிய பட்டியலைத் தயாரித்து, துண்டு பிரசுங்களில் அச்சடித்து பக்தர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும். தீபத்திருவிழா அன்று கோவில்களுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காகப் போதிய எண்ணிக்கையில் ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்களை நியமித்துக் கொள்ள வேண்டும். கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு விளம்பரம் செய்ய வேண்டும். பக்தர்கள் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய போதிய கவுண்ட்டர்கள், தடுப்புகள் போன்றவற்றை அமைத்துக் கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பக்தர்கள் தங்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு ஏதேனும் உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களை நியமித்து, மருத்துவ முகாமை நடத்தலாம். தேவஸ்தான சுகாதாரத்துறை அதிகாரிகள் தீபத்திருவிழாவின்போது கோவிலை சுற்றிலும் குப்பைகளை அகற்றி, தூய்மையாக வைத்திருக்க வேண்டும். தீபத்திருவிழா அன்று பக்தர்கள் அந்தந்த ஊர்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வர போதிய போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அதற்காக கூடுதலாக அரசு பஸ்களை இயக்கலாம். தேவஸ்தான இலவச வாகனங்களை இயக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் ஸ்ரீவாரி கோவில் தலைமை அர்ச்சகர் வேணுகோபால தீட்சிதலு, பக்தி சேனல் தலைமை அதிகாரி சண்முககுமார், என்ஜினீயர் நாகேஸ்வர ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டம் முடிந்ததும் தேவஸ்தான இணை அதிகாரி சதாபார்கவி திருப்பதியில் குழந்தைகள் மருத்துவமனை கட்டும் பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், கட்டுமானப் பணியை விரைந்து மேற்கொள்ளுமாறு அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.