மிகப் பெரிய பயணிகள் விமானங்களை இந்தியா விரைவில் தயாரிக்கும்- பிரதமர் மோடி நம்பிக்கை..!!
பிரதமர் மோடி இன்று குஜராத்தின் வதோதரா நகரில் ராணுவ போக்குவரத்துக்கான சி-295 விமான உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டினார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆச்சார்ய தேவ்விரத், பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங், விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, டாடா சன்ஸ் தலைவர் என் சந்திரசேகரன் மற்றும் ஏர்பஸ் தலைமை வர்த்தக அதிகாரி கிறிஸ்டியன் ஷெரர் ஆகியோர் இந்த இதில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியுள்ளதாவது:
இந்தியாவை உலகின் உற்பத்தி மையமாக மாற்றும் திசையில் இன்று நாம் ஒரு பெரிய முயற்சியை எடுத்துள்ளோம். பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்தியாவுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் தேவைப்படும். தற்போது இந்தியா உலக அளவில் ராணுவ போக்குவரத்து விமானங்களை தயாரிப்பதில் மிகப்பெரிய நாடாக மாறி வருகிறது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ராணுவ போக்குவரத்து விமானங்கள், ஆயுதப்படைகளுக்கு பலம் கொடுப்பது மட்டுமின்றி, வதோதரா நகரை விமானத் துறை மையமாக அடையாளப்படுத்தும். இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற பெருமையுடன் பயணிகள் போக்குவரத்திற்கான பெரிய விமானங்களை இந்தியா விரைவில் தயாரிக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் தயாரிப்போம், உலகத்துக்காக தயாரிப்போம் என்ற மந்திரத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது.
இந்தத் திட்டம் மூலம் எதிர்காலத்தில் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆர்டர்களை பெற முடியும். ராணுவ போக்குவரத்து விமான தயாரிப்பு வரிசை பட்டியலில் உலகின் முதல் மூன்று நாடுகளில் ஒன்றாக நாம் நுழைய உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.