;
Athirady Tamil News

2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் தேர்தலா..? – முன்னாள் தலைமை கமிஷனர் பேட்டி..!!

0

ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற நிலையை ஏற்படுத்த பிரதமர் மோடி விரும்புகிறார். இதற்காக அவர் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறார். தேர்தல் கமிஷன், சட்டகமிஷன், நிதி ஆயோக் போன்ற அமைப்புகளும் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதை ஆதரிக்கின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க. இதை தீவிரமாக ஆதரிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சி இதில் எச்சரிக்கையான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் சில அரசியல் கட்சிகளும், ஆய்வாளர்களும் ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் என்ற விஷயத்தில் தீவிரம் காட்டவில்லை. இந்த நிலையில் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி.ராவத் இது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:- ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் நடத்தும் யோசனை ஒன்றும் புதிதல்ல. 1951-1967 இடையே அப்படி ஒரே நேரத்தில்தான் நாடாளுமன்ற, சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. 1968, 1969 ஆண்டுகளில் முன்கூட்டியே சட்டசபைகளை கலைத்தபோதுதான் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறையில் இருந்து தடம் புரளும் நிலை உருவானது.

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதையொட்டிய ஒரு விரிவான திட்டத்தை தேர்தல் கமிஷன், மத்திய அரசிடம் ஏற்கனவே அளித்துள்ளது. 1970-ம் ஆண்டுக்கு முன்பு இருந்தது போலவே இப்போதும் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவது சாத்தியம்தான்.

ஒரே நேரத்தில் தேர்தல்
ஆனால் இதில் அனைத்து அரசியல் கட்சிகளிடம் ஆளும் கட்சி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். சம்மந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் கருத்தொற்றுமை ஏற்படுத்தி அரசியல் சாசனத்தில் தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். 2019 பொதுத்தேர்தலை சட்டசபை தேர்தல்களுடன் ஒரே நேரத்தில் நடத்துவது தொடர்பாக சட்ட கமிஷன் ஒரு வரைவு அறிக்கையை 2018 ஆகஸ்டு மாதம் 30-ந் தேதியும், நிதி ஆயோக் தனது விவாத அறிக்கையிலும் விரிவான திட்டத்தை தெரிவித்தன. 2019-ல் அவ்வாறு நடத்த வாய்ப்பு இருந்தது. இப்போது 2024-ம் ஆண்டு வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும், சட்டகமிஷனும், நிதி ஆயோக்கும் பரிந்துரை செய்தபடி ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல்களையும் நடத்துவதற்கு வாய்ப்பு அப்படியே உள்ளது என்று அவர் கூறினார்.

அரசியல் ஆய்வாளர் சொல்வது என்ன?
ஆனால், மூத்த அரசியல் ஆய்வாளர் கிரிஜா சங்கர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தற்போதைய சூழலில் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை என உறுதிபட தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:- இதற்கு திரளான வளங்கள் தேவைப்படுகின்றன. குறிப்பாக பாதுகாப்பு படைகள் வேண்டும். தற்போதைய சூழலில் அது சாத்தியம் இல்லை. இப்போதும்கூட ஒரு பெரிய மாநிலத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது சாத்தியமில்லாமல் இருக்கிறது. பல மாநிலங்களில் தேர்தல் கமிஷனால் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த முடிவதில்லை. பெரிய மாநிலங்களில் 4 அல்லது 5 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. பாதுகாப்பு காரணங்கள்தான் இதில் முக்கிய இடம் பிடிக்கின்றன. ஒரே நேரத்தில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் நடத்துவதில் நடைமுறை சிக்கல்கள் உள்ளன. அரசு வேண்டுமானால் அரசியல் சாசனத்தில் திருத்தம் செய்யலாம். சட்டசபையின் ஆயுள்காலத்தை குறைக்கலாம். ஆனால் மாநிலங்களில் தேர்தலின்போது அமர்த்துவதற்கு திரளான பாதுகாப்பு படைக்கு அவர்கள் எங்கே போவார்கள்? அதுமட்டுமல்ல, மின்னணு வாக்கு எந்திரங்கள் உள்ளிட்ட பிற கருவிகளுக்கு எங்கே போவது? என்று அவர் கூறினார்.

இப்போதும் சாத்தியம்
சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான் ஆகிய 4 மாநிலங்களில் 2023-ம் ஆண்டிலும், ஆந்திரா, தெலுங்கானா, அருணாசலபிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களில் 2024-ம் ஆண்டிலும் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் 2024-ம் ஆண்டு நடத்த வேண்டும். அரசியல் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தினால் அரியானா, ஜார்கண்ட், மராட்டியம், டெல்லி ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல்களை நாடாளுமன்ற தேர்தலுடன் நடத்த முடியும். எஞ்சிய 16 மாநிலங்களிலும், புதுச்சேரியிலும் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்த வேண்டும். இதை முன்கூட்டி நடத்த வேண்டும். எனவே அரசியல் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமை ஏற்படுத்தினால் நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டசபை தேர்தல்களை நடத்த முடியும். அப்படியே அரசியல் கட்சிகளிடம் கருத்து ஒற்றுமை ஏற்பட்டாலும், ஒரே நேரத்தில் இந்த தேர்தல்களை நடத்த பாதுகாப்பு அளிப்பது சாத்தியமா என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.