சில முஸ்லிம் அமைப்புகளின் தடை விரைவில் நீங்கும் – ஹரீஸ் எம்.பி!! (வீடியோ)
பாதுகாப்பு அமைச்சின் தடைப் பட்டியலில் உள்ள 11 முஸ்லிம் அமைப்புகளில் 6 அமைப்புக்கள் மீதான தடையை நீக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும்இ இதன் முதற்கட்ட நடவடிக்கையாக குறித்த 6 அமைப்புகளின் முக்கிய பிரதிநிதிகளுடன் பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள் அண்மையில் கலந்துரையாடியுள்ளதாகவும் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர முதல்வர் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை(30) இரவு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தங்களது வேண்டுகோளில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்பில் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். 11 முஸ்லிம் அமைப்புக்கள் இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 அமைப்புகள் எவ்வித பயங்கரவாத சம்பவங்களுடனோ பயங்கரவாத அமைப்புகளுடனோ தொடர்பைக் கொண்டிருக்கவில்லை எனவே, இவற்றின் மீது விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென நானும் அநுராதபுரம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான இஷாக் ரஹ்மானும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
எமது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். இதனடிப்படையில் தடை செய்யப்பட்ட குறித்த 6 அமைப்புகளின் முக்கியஸ்தர்களுடன் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் தனித்தனியே கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், குறித்த 6 முஸ்லிம் அமைப்புகளிடமிருந்தும் பாதுகாப்பு அமைச்சினால் சில ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன. அந்த ஆவணங்கள் கிடைத்தவுடன் அதிகாரிகள் அதனை பரிசீலனை செய்து 6 அமைப்புகள் மீதான தடையை நீக்கவுள்ளனர் என்று மேலும் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”