;
Athirady Tamil News

திலினி பிரியமாலினியிடம் மோசடி செய்யப்பட்ட பிரிவேல்த் குளோபல் நிதி, சிக்கியிருக்கிறதா? : பாதிக்கப்பட்டவர்கள் கேள்வி!! (வீடியோ)

0

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தமிழ் பேசும் மக்களிடமிருந்து 1750 மில்லியன் [ரூபாய் அடங்களாக நாடு முழுவதிலும் 2000 மில்லியன் ரூபாய் அளவில் மோசடி செய்துவிட்டு கடல் வழியாக சட்டவிரோதமாக தமிழகத்தில் நுழைந்து சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவன பிரதானி ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோரை இலங்கைக்கு நாடுகடத்த வேண்டும் என பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு தரப்பினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை (30) மாலை சாய்ந்தமருது பிரதேசத்தில் ஊடகங்களிடம் இது தொடர்பாக கருத்து வெளியிட்டனர்.

பிரிவேல்த் குளோபல் பாதிக்கப்பட்ட அமைப்பின் சார்பில் அங்கு கருத்து தெரிவித்த ஏ.றிஸ்வாட், ஏ.ஆர்.எம். ஜெமீல் ஆகியோர், பிரிவேல்த் குளோபல் நிதி நிறுவனத்தினால் பாதிக்கப்பட்ட 1400 குடும்பங்கள் பொருளாதார நெருக்கடியினால் நிர்க்கதியாகியுள்ளது. குருவி சேர்ப்பது போன்று சேமித்த பணம், வீடுகட்ட சேமித்த பணம், அங்கவீனர்களின் பணம் என பலரும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஷிஹாப் ஷரீப் அவரது பாரியார் பர்ஸானா மாக்கர் ஆகியோர் தொடர்பில் இந்தியாவில் நடைபெற்று வந்த நீதிமன்ற சட்ட நடவடிக்கைகள் முடிந்துள்ளதாக அறிகிறோம். சர்வதேச பொலிஸாரினால் தேடப்பட்டு வரும் இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துவது மூலம் இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள எங்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்கும் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மை கிட்டும் வகையில் இது தொடர்பில் நேரடியாக தலையிட்டு இவர்களை இலங்கைக்கு நாடு கடத்துமாறு ஜனாதிபதி அடங்களாக துறைக்கு பொறுப்பான அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் மட்டக்களப்பு, பொத்துவில், கல்முனை, சம்மாந்துறை நீதிமன்றங்களில் இவர்களுக்கு எதிராக 100 க்கு மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளது. கடந்த 2020.09.10 அன்று பாராளுமன்றத்தில் கூட இது தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட எம்.பி ஹரிசினால் பேசப்பட்டது. 2020.11.08 அன்று பொலிஸ் ஊடக பேச்சாளர் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார். சர்வதேச பொலிஸாரின் அறிவித்தாலும் வெளியிடப்பட்டுள்ளது. இப்படியான இந்த மோசடி விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு உரிய நியாயத்தை பெற்றுத்தர வேண்டும். இது நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு சற்று ஆறுதலாளிக்கும் விடயமாக அமையும். இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள் கடுமையான கஷ்டங்களிலும், மன உளைச்சலிலும் இருக்கின்றோம்.

அண்மையில் நிதிமோசடியில் சிக்கி பேசுபொருளாக மாறியிருக்கும் திலினி பிரியமாலினியிடமும் எமது காசு முதலீடு செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். திலினி விடயத்தில் துரிதமாக செயற்படும் புலனாய்வு பிரிவு எங்களின் விடயத்திலும் அதே நிலையில் இயங்கினால் சிறப்பாக இருக்கும் என்று நம்புகின்றோம். இது விடயமாக நிறைய வழக்குகள் கிடப்பில் இருக்கிறது.எங்களுக்கு நீதியை பெற்றுத்தர சகலரும் முன்வர வேண்டும் என்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.