எம்.பிக்களிடம் விசாரணைகளை நடத்தவில்லை!!
பாராளுமன்ற உறுப்பினர்களின் இரட்டைக் குடியுரிமை தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் எவ்வித விசாரணைகளையும் ஆரம்பிக்கவில்லை என்று அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருமான பியூமி பண்டார, இன்று (31) தெரிவித்தார்.
அது தொடர்பான தகவல்களை வெளியிடும் அதிகாரம் பாராளுமன்றத்துதுக்கு மாத்திரமே உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
பல்வேறு கட்சி எம்.பிக்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து திணைக்களத்திடம் இருந்து தகவல்கள் கோரப்படுவதாக தெரிவித்த அவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையைத் தொடர்ந்து திணைக்களம் கடந்த வாரம் விசேட விசாரணையை ஆரம்பித்தாகவும் விசாரணைகள் இறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
வெளிநாடுசென்றுள்ள திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் இலங்கை திரும்பி ஆவணத்தில் கையொப்பம் இட்டதும் அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் மேற்குறிப்பிட்ட விடயத்தை அறிவித்துள்ளார்.