ரணிலுக்கு வழங்கினால் எனக்கும் வழங்கவும் !!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்குகளை கைவிட நீதிமன்றம் தீர்மானித்தால், தனக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது சட்டத்தரணி ஊடாக நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு, இன்று (31) அறிவித்தார்.
கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியன் கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்ற ஈஸ்டர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 33 வழக்குகள், நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நுவன் தாரக ஹினடிகல முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் அறிவிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரி, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட சிலரை பிரதிவாதிகளாக பெயரிட்டு குறித்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
பதவியில் உள்ள ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு நடவடிக்கையை தொடர முடியாது என ஏழு உயர் நீதிமன்ற நீதியரசர்கள் கொண்ட குழாம் அண்மையில் தீர்மானித்துள்ளதாக அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்தார்.
எனவே, அவரை பிரதிவாதியாக பெயரிட்டுள்ள அனைத்து வழக்குகளிலும் இருந்தும் அவரை விடுக்க வேண்டும் எனவும் கோரிநின்றார்.
இதன்போது, அடிப்படை ஆட்சேபனையை எழுப்பிய முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணி மேற்குறிப்பிட்ட விடயத்தை மன்றுக்கு அறிவித்தார்.
வாதப்பிரதி வாதங்களை கருத்திற் கொண்ட நீதிபதி, வழக்குகளை விசாரணையின்றி கைவிட முடியுமா? முடியாதா? என்ற உத்தரவு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 15ஆம் திகதி பிறப்பிக்கப்படும் என்று அறிவித்தார்.