கைதான கல்லூரி மாணவி உள்பட 3 பேருக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்..!!
3 பேர் கைது
ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா கஞ்சிகல் கிராமம் பண்டே மடம் உள்ளது. இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்த பசவலிங்க சுவாமி கடந்த 5 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். ஹனிடிராப் முறையில் மிரட்டி பசவலிங்க சுவாமியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புராவை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவி நீலாம்பிகா, கன்னூர் மடத்தின் மடாதிபதி மிருதனஞ்ஜெய சுவாமி, வக்கீலான மகாதேவய்யா ஆகியோரை நேற்று முன்தினம் மாகடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டு நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து 3 பேரையும் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் மிருதனஞ்ஜெய சுவாமியும், மகாதேவய்யாவும் ராமநகர் சிறையில் அடைக்கப்பட்டனர். நீலாம்பிகா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
6 நாட்கள் போலீஸ் காவல்
இந்த நிலையில் நேற்று 3 பேரையும் மாகடி 1-வது ஜே.எம்.சி. கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை தங்களது காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி 3 பேரையும் 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். இதன்பின்னர் 3 பேரையும் போலீசார் ரகசிய இடத்திற்கு அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நீலாம்பிகா வலையில் மடாதிபதி பசவலிங்க சுவாமி சிக்கியது எப்படி குறித்து போலீசார் விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது துமகூருவில் உள்ள சித்தகங்கா மடத்திற்கு நீலாம்பிகா அடிக்கடி சென்று வந்து உள்ளார். அப்போது அந்த மடத்திற்கு வந்த பசவலிங்க சுவாமியுடன் பழக்கம் ஏற்பட்டு உள்ளது. பின்னர் பசவலிங்க சுவாமியின் செல்போன் எண்ணை நீலாம்பிகா வாங்கி உள்ளார். இதன்பின்னர் பசவலிங்க சுவாமியை அடிக்கடி தொடர்பு கொண்டு பேசிய நீலாம்பிகா எனக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளது. பணப்பிரச்சினை அதிகமாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அவ்வப்போது பசவலிங்க சுவாமியிடம் இருந்து ரூ.500, ரூ.1,000-த்தை நீலாம்பிகா வாங்கி உள்ளார்.
பணம் கேட்டு மிரட்டல்
முதலில் பசவலிங்க சுவாமியிடம் சாதாரணமாக பேசி வந்த நீலாம்பிகா பின்னர் மடாதிபதியை மயக்கும் வகையில் வசீகரமாக பேசி வந்ததும், வீடியோ காலில் பேசும் போது பசவலிங்க சுவாமியை ஆபாசமாக வீடியோ எடுத்ததும் தெரியவந்து உள்ளது. பசவலிங்க சுவாமி தவிர வேறு சில மடாதிபதிகளுடன் நீலாம்பிகாவுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்து உள்ளது.
அந்த மடாபதிகளுடன் வீடியோ காலில் நீலாம்பிகா பேசியதும் தெரிந்து உள்ளது. இதனால் வேறு சில மடாதிபதிகளின் ஆபாச வீடியோக்கள் நீலாம்பிகாவிடம் இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்து உள்ளது. இந்த வழக்கில் கைதாகி உள்ள மகாதேவய்யா, பசவலிங்க சுவாமியிடம் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். அப்போது உங்களது ஆபாச வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோவை வெளியிடாமல் இருக்க கோடிக்கணக்கில் பணம் தர வேண்டும் என்று கேட்டு மிரட்டி உள்ளார். அவர் வேறு சில மடாதிபதிகளையும் மிரட்டி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.