;
Athirady Tamil News

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் ஐப்பசி திருவிழா ஆராட்டு இன்று நடக்கிறது..!!

0

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் ஐப்பசி திருவிழாவின் போது பரிவேட்டை நிகழ்ச்சி மற்றும் ஆராட்டு விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான விழா தொடங்கி நடந்து வருகிறது. நேற்று பரிவேட்டை விழா நடந்தது. இன்று ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது பத்மநாபசுவாமி கோவிலில் இருந்து சுவாமி சிலைகள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும்.

ஊர்வலத்தில் பத்மநாபசுவாமி, நரசிங்கமூர்த்தி, கிருஷ்ணன் விக்கிரங்கள் இடம் பெறும். ஒவ்வொரு ஆண்டும் இந்த ஊர்வலம் திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை வழியாக செல்லும். இதற்கு காரணம் இந்த ஊர்வலம் செல்லும் பாதையில் தான் 1932-ம் ஆண்டு விமான நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது கோவில் ஊர்வலம் நடைபெறும்போது, விமான நிலையம் மூடப்பட்டு ஊர்வலத்திற்கு வழிவிடப்படும் என்றும் ஊர்வலம் சென்றபின்பே விமான நிலையத்தில் விமானங்கள் இறங்கவும், புறப்படவும் அனுமதி வழங்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டது. அப்போது முதல் ஒவ்ெவாரு ஆண்டும் பத்மநாபசுவாமி கோவிலில் ஐப்பசி மற்றும் பங்குனி மாத திருவிழாக்களின் போது விமான நிலையத்தின் ஓடு பாதை மூடப்படுவது வழக்கம். அந்த வகையில் ஐப்பசி திருவிழா ஆராட்டு ஊர்வலத்தையொட்டி இன்று திருவனந்தபுரம் விமான நிலைய ஓடுபாதை 5 மணி நேரம் மூடப்படுகிறது.

இன்று மாலை 4 மணிக்கு மூடப்படும் ஓடுபாதை இரவு 9 மணிக்கு மேல் தான் திறக்கப்படும். இந்த ஊர்வலத்தில் திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் இப்போதைய தலைவர் ஆதித்ய வர்மா உடைவாளுடன் முன்செல்ல ஊர்வலம் நடைபெறும். இது பற்றி விமான நிலைய அதிகாரிகள் கூறும்போது, விமான நிலைய ஓடுபாதை மூடப்படும் தகவலை ஒருவாரத்திற்கு முன்பே அனைத்து நாடுகளின் விமான நிறுவனங்களுக்கும் தெரிவித்து விட்டோம். இன்று விமான நிலைய ஓடுபாதை வழியாக சுவாமி ஊர்வலம் நடைபெறும்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு அளிப்பார்கள். ஊர்வலம் சென்ற பின்பு விமான நிலைய ஓடுபாதை மீண்டும் திறக்கப்படும், என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.