போராட்ட விவகாரம்: சட்டமா அதிபரின் அனுமதி வேண்டும் !!
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97 (1) பிரிவுக்கு அமைய சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம அறிவித்ததையடுத்து, அழைப்பாணையை வாபஸ் பெறுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, இன்று (01) உத்தரவிட்டார்.
காலி முகத்திடலுக்கு அருகில் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை தடுத்த குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நளின் தில்ருக் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையே கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் குறித்து, குற்றவியல் நடைமுறைச் சட்டத்துக்கு அமைய ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், மேற்குறித்த இரண்டு உயர் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நவம்பர் 8 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றையதினம் (01) நகர்த்தல் பத்திரத்தை தாக்கல் செய்து ஆஜராகிய சிரேஷ்ட அரச சட்டத்தரணி, உண்மைகளை தவறாக சித்தரித்து உத்தரவு பெறப்பட்டதால், இரண்டு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை மீளப்பெறுமாறு கோரினார்.
மேலும், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97 (1) பிரிவுக்கு அமைய சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்றும் அறிவித்தார்.
உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான், இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக விடுக்கப்பட்ட அழைப்பாணையை வாபஸ் பெற தீர்மானித்ததுடன், இந்த வழக்கை நவம்பர் 8ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
அரகலய போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்காக ஒக்டோபர் 9ஆம் திகதி ஒன்றுகூடியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக அடுத்த தினம், சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போதே, அனுமதியின்றி போராட்டம் இடம்பெறுவதாகக் கூறி தடுக்கப்பட்டதாகவும் அதற்கு இடையூறு விளைவித்ததாகவும் குறிப்பிட்டு குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.