சுயாதீன ஊடகவியலாளர் ரமேஷ் மாரடைப்பு காரணமாக உயிரிழப்பு; இறுதி கிரியைகள் நாளை!!
சமூக பணியாளரும் , சுயாதீன ஊடகவியலாளருமான செல்வராசா ரமேஸ் (வயது 53) மாரடைப்பு காரணமாக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மானிப்பாயில் உள்ள அவரது இல்லத்தில் நாளைய தினம் வியாழக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு இறுதி கிரியைகள் இடம்பெற்று , நவாலி ஆரியம்பிட்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
உள்ளூராட்சி மன்ற உதவியாளராகவும் , சமூக செயற்பாட்டாளராகவும் , யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் உள்ளிட்டவற்றில் சுயாதீன ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
அத்துடன் ஹேமலதா ஞாபாகார்ந்த நிதியத்தின் தலைவராக இருந்தவர். நிதியத்தின் ஊடாக குறிப்பிடத்தக்க பல்வேறு சமூக சேவைகளை ஆற்றி இருந்தார். அத்துடன் இவர் ஹேமலதாவின் உடன் பிறந்த சகோதரரும் ஆவார்.
நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்த மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக அங்கு பணியில் இருந்த ஜெ – 134 கிராம சேவையாளர் பிரிவின் கிராம அலுவலகரான செல்வி. ஹேமலதா செல்வராசா 1995ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09ஆம் திகதி விமான படையின் விமான குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்தார். அன்றைய சம்பவத்தில் இவருடன் 147 பேர் உயிரிழந்து இருந்தனர்.
குறித்த விமான தாக்குதலில் உயிரிழந்த ஹேமலதா செல்வராசாவின் நினைவாகவே ஹேமலதா ஞாபகார்த்த நிதியம் ஆரம்பிக்கப்பட்டு செயற்பட்டு வருகிறது.