சட்டமா அதிபருக்கு விசேட சிறப்புரிமைகள் இல்லை !!
சட்டமா அதிபர், நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கை அழைக்க விரும்பினால், சட்டமா அதிபர் முறைப்பாடு செய்தவருக்கு அல்லது அவரது சட்டத்தரணிக்கு அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டமா அதிபர் விசேட சிறப்புரிமைகள் கொண்டவர் அல்ல என்று கோட்டை நீவான் நீதிமன்றத்தில், இன்று (02) தெரிவித்தார்.
காலி முகத்திடலுக்கு அருகில் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி நடைபெற்ற அமைதிப் போராட்டத்தை தடுத்த குற்றச்சாட்டின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நளின் தில்ருக் ஆகியோருக்கு பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணை நேற்று (01) வாபஸ் பெறப்பட்டது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97 (1) பிரிவுக்கு அமைய சட்டமா அதிபரின் அனுமதியின்றி பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று சிரேஷ்ட அரச சட்டத்தரணி ஷமிந்த விக்கிரம அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், முறைப்பாட்டாளர் சார்பில் இன்று (02) ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், இந்த வழக்கு நகர்த்தல் பத்திரம் மூலம் அழைக்கப்பட்டமைக்கு ஆட்சேபனை தெரிவித்ததுடன், இந்த தனிப்பட்ட முறைப்பாட்டில் சட்டமா அதிபர் முறைப்பாட்டாளர் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்கள் மூலம் இந்த வழக்கு அழைக்கப்பட்டமையை தெரிந்து கொண்டதாகவும் முறைப்பாட்டாளர் தவறான சமர்ப்பிப்புகளை செய்துள்ளதாக அரச சட்டத்தரணி மன்றுக்கு அறிவித்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தனிப்பட்ட முறைப்பாட்டாளரோ அல்லது சட்டத்தரணியோ பொய்யான விடயத்தை முன்வைக்கவில்லை என்றும் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தவில்லை என்றும் மன்றுக்கு அறிவித்தார்.
பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 88ஆவது சரத்தையும் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 97ஆவது சரத்தையும் இந்த வழக்குடன் தொடர்புபடுத்த முடியாது என்பதையும் சுட்டிக்காட்டியதுடன், முறைப்பாட்டாளர் இல்லாத நிலையில் வழக்கு விசாரணைக்கு ஒருபோதும் இடமளிக்க வேண்டாம் என்றும் மன்றில் கோரிக்கை விடுத்தார்.
அரகலய போராட்டத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதற்காக ஒக்டோபர் 9ஆம் திகதி ஒன்றுகூடியவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக அடுத்த தினம், சட்டத்தரணிகள் மற்றும் தொழில் வல்லுநர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதன்போதே, அனுமதியின்றி போராட்டம் இடம்பெறுவதாகக் கூறி தடுக்கப்பட்டதாகவும் அதற்கு இடையூறு விளைவித்ததாகவும் குறிப்பிட்டு குறித்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.