மலையக இளைஞர்களுக்கு துணை நிற்கும் ஜப்பான் !!
தற்போது ஜப்பானில் பல்வேறு துறைகளில் ஊழியர் பற்றாக்குறை காணப்படுகின்றது. தாதி, நலன் பேணல், தானியங்கி இயந்திர வல்லுநர் மற்றும் ஏனைய துறைகளில் ஊழியர் பற்றாக்குறை உள்ளது. உங்களுக்கு அந்த திறன்கள் காணப்படுமாயின், ஜப்பான் மொழித் திறன் இருக்குமாயின், ஜப்பானில் பணியாற்றுவதற்கான சாத்தியங்கள் காணப்படுகின்றது என இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி தெரிவித்தார்.
மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி உள்ளிட்ட குழுவினர் நேற்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார்.
சந்திப்பின் பின் ஹட்டனில் உள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதேகி இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில்,
ஜப்பானில் தொழில்வாய்ப்புகள் அதிகமாக காணப்படுவதுடன், பணியாற்றுவதற்கான சாத்தியங்களும் காணப்படுகின்றது. அதனை நாம் வரவேற்கின்றோம். குறிப்பாக இளையோருக்கு அதற்கான ஆசை இருக்கும்.
ஜப்பானில் மாத்திரமல்ல உலகளாவிய ரீதியிலுள்ள நாடுகளில் இளம் திறமையுள்ள தொழிலாளர்களுக்கு வாய்ப்புகள் காணப்படுகின்றன. இந்த நிலையமானது இளையோருக்கு பல்வேறு துறைகளில் பயிற்சிகளை வழங்குவது அற்புதமானது.
இலங்கையில் பின்தங்கிய பகுதியாக மலையகம் காணப்படுகின்றது. தொடர்ந்தும் எங்களுடைய உதவி மலையகத்திற்கும் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.