ஜம்மு காஷ்மீரில் ‘இ-ரிக்சா’ டிரைவரான முதல் பெண்..!!
பயங்கரவாதத்தில் பாதிக்கப்பட்ட ஜம்மு காஷ்மீரில், 3 குழந்தைகளின் தாய் ஒருவர் மின்சார வாகனமாக ‘இ-ரிக்சா’ ஓட்டிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார். அங்குள்ள நக்ரோடா பகுதியை சேர்ந்தவர் சீமா. 40 வயதான இவருக்கு 15 வயதில் ஒரு மகனும், 14 மற்றும் 12 வயதுடைய 2 மகள்களும் உள்ளனர். இவர் கடந்த 4 மாதங்களாக நக்ரோடா மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ‘இ-ரிக்சா’ ஓட்டி வருகிறார். இது குறித்து சீமா கூறியதாவது:- எனது கணவரின் வருமானம் போதாத காரணத்தால் இந்த வேலையை செய்தேன். எங்களுக்கு குடும்ப செலவு அதிகமாக இருக்கிறது. எனவே செலவை சமாளிக்கவும், கணவருக்கு உதவியாக இருக்கவும் விரும்பினேன். எனக்கு வேறு வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே நானும், என் கணவரும் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கி, ரூ.3 ஆயிரம் மாத தவணையில் ‘இ-ரிக்சா’ வாங்கினோம். எனது கணவர் எனக்கு இ-ரிக்சாவை ஓட்ட கற்றுக்கொடுத்தார். பல்வேறு துறைகளில் பணிபுரியும் பெண்களால் நான் ஈர்க்கப்பட்டேன். பெண்களால் ரெயில்களையும், விமானங்களையும் இயக்க முடியும் போது, நாம் ஏன் இ-ரிக்சாவை ஓட்ட முடியாது என்று நினைத்தேன். அது என்னை மேலும் ஊக்கப்படுத்தியது. நான் அதை விரைவாக கற்றுக்கொண்டேன். எனது கணவர் எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறார். பெண்கள் எனது வாகனத்தில் பயணம் செய்வதை பாதுகாப்பாக உணர்கிறார்கள். மாணவிகளையும் பள்ளிகளுக்கு அழைத்துச் சென்று வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.