குஜராத்தில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு- தேர்தல் தேதி அறிவிப்பு..!!
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தின் சட்டசபை தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த 14-ந் தேதி அறிவித்தது. அதன்படி இமாச்சல பிரதேசத்தில் நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்றும் டிசம்பர் 8-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் குஜராத் மாநிலத்திற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் தேதியை இன்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என தகவல் வெளியானது. அதன்படி, இன்று பகல் 12 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்த தலைமை தேர்தல் ஆணையர் குஜராத் மாநில சட்டசபை தேர்தல் நடைபெறும் தேதி குறித்து அறிவித்தார். இதுகுறித்து, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் கூறியதாவது:- குஜராத் மாநில சட்டசபை தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி மற்றும் 5ம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8ம் தேதி நடைபெறும்.
குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18ம் தேதியுடன் முடிவடைகிறது. குஜராத்தில் மொத்தம் 182 தொகுதிகளில்4.90 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில் மொத்தம் 51.782 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குஜராத் மாநில தேர்தலில் 4.6 லட்சம் புதிய வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். 80 வயதானவர்கள், 40 சதவீதம் திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.