சுப்ரீம் கோர்ட்டு அனுமதி: இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு டிசம்பர் 10-ந் தேதி தேர்தல்..!!
சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச ஒலிம்பிக் குழு கூட்டத்தில் ஒப்புக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வரைவு சட்ட விதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும், இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழுவுக்கு தேர்தல் நடத்தவும் கால அளவு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த கால நிர்ணயத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10-ந் தேதி ஒப்புதல் அளித்தது. மேலும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் செயற்குழு வாரிய கூட்டம் வருகிற டிசம்பர் 5-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டதால் இந்திய ஒலிம்பிக் சங்க தேர்தலை அதற்கு முன்னதாக டிசம்பர் 3-ந் தேதி நடத்தவும் ஒப்புதல் அளித்தது.
மேலும் சட்டத்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எல்.நாகேஸ்வரராவ் தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்க வரைவு திருத்த விதிகளை தயாரித்த நீதிபதி குழு, சங்கத்தின் செயற்குழு தேர்தலை டிசம்பர் 10-ந் தேதி நடத்தலாம் என புதிய தேதியை சுப்ரீம் கோர்ட்டில் பரிந்துரைத்தது.
நீதிபதி நாகேஸ்வரராவ் குழுவின் பரிந்துரை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சந்திர சூட், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அந்த பரிந்துரையை நீதிபதிகள் ஏற்றுக்கொண்டனர். இந்திய ஒலிம்பிக் சங்க உறுப்பினர்களுக்கு வரைவு திருத்த சட்ட நகல்களை சுற்றறிக்கையாக அனுப்புவதற்காக வழிமுறைகளையும் நீதிபதி நாகேஸ்வர ராவ் தெரிவிப்பார் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு சம்பளமாக ரூ.20 லட்சம் நிர்ணயித்து உத்தரவிட்டனர்.