பெங்களூருவில் நடந்த உலக தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.9.80 லட்சம் கோடிக்கு ஒப்பந்தம்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்..!!
முதலீட்டாளர் மாநாடு
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் உலக முதலீட்டாளர் மாநாடு பெங்களூரு அரண்மனை மைதானத்தில் கடந்த 2-ந் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, பிரான்சு உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தொழில் முதலீட்டாளர்கள் கலந்துகொண்டனர். அவர்கள் கர்நாடக அரசுடன் தொழில் ஒப்பந்தங்களை மேற்கொண்டனர். இந்த நிலையில் இந்த மாநாட்டின் நிறைவு விழா அரண்மனை மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:- பெங்களூருவில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த முதலீட்டாளர்கள் மாநாடு இன்றுடன் (நேற்று) நிறைவடைகிறது. இந்த மாநாட்டில் ரூ.9.80 லட்சம் கோடிக்கு தொழில் முதலீடுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உப்பள்ளி-தார்வார், மைசூரு, மங்களூரு, கலபுரகி, பல்லாரி, துமகூரு ஆகிய மாவட்டங்களில் தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அங்கு நில வங்கி ஏற்படுத்தியுள்ளோம். சிவமொக்கா, விஜயாப்புரா விமான நிலையங்கள் விரைவில் செயல்பட தொடங்கும்.
நிர்வாக அனுமதி
கார்வாரில் விமான நிலையம் அமைக்கப்படுகிறது. 6 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்கப்படுகின்றன. தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. ஏறத்தாழ ரூ.10 லட்சம் கோடிக்கு போடப்பட்டுள்ள ஒப்பந்தங்களை செயல்படுத்த குறித்த காலத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 3 மாதங்களில் இந்த தொழில் திட்டங்களுக்கு நிர்வாக அனுமதி அளிக்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.3 லட்சத்து 5 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் 15 சதவீதம் மட்டுமே அமல்படுத்தப்பட்டது. இன்றைய காலக்கட்டத்தில் முதலீட்டாளர்கள் மாநாடு மிக முக்கியமானது. உலக நாடுகள் கடினமான நிலையை எதிர்கொண்டு வருகின்றன. கர்நாடகம் மீது முதலீட்டாளர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
கடினமாக உழைத்தால் மட்டுமே அதற்கான பலன் கிடைக்கும். நாட்டில் மொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் கர்நாடகத்தின் பங்கு 63 சதவீதம் ஆகும். இந்த முறையில் நாம் புதிய முறைகளை கையாள தொடங்க வேண்டும். இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார். இந்த மாநாட்டையொட்டி கண்காட்சி நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் அந்த நிறுவனங்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை பார்வையாளர்களின் பார்வைக்கு வைத்தன. இந்த நிறைவு விழாவில் மத்திய மந்திரி பகவந்த் கூபா, தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி, மின்சாரத்துறை மந்திரி சுனில்குமார், தலைமை செயலாளர் வந்திதா சர்மா, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, கமிஷனர் குன்சன் கிருஷ்ணா உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.