செயற்கை தட்டுப்பாடு எப்போது நீங்கும்?
நாட்டில் நிலவும் செயற்கையான எரிபொருள் தட்டுப்பாடு திங்கட்கிழமை (07) முடிவுக்கு வரும் என்று இலங்கை பெற்றோலிய தனியார் பௌசர் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
விற்பனையாளர்கள், தேவையான எரிபொருள் இருப்புகளை முற்பதிவு செய்யத் தவறியமையே பிரதான காரணம் எனவும் இது மனிதனால் உருவாக்கப்பட்ட தட்டுப்பாடு என்றும் சங்கத்தின் செயலாளர் சாந்த சில்வா தெரிவித்தார்.
உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் வெகுவாகக் குறைந்துள்ளதால், அரசாங்கத்தின் எரிபொருள் விலைச் சூத்திரத்தின்படி மேலும் குறைக்கப்படும் என்று அவர்கள் எதிர்பார்த்தாகவும் சில்வா சுட்டிக்காட்டினார்.
இருப்பினும், எரிபொருள் விலை திருத்தம் செய்யப்படாத காரணத்தால் மீண்டும் முற்பதிவு செய்யத் ஆரம்பித்துள்ளனர் என்று குறிப்பிட்டார்.
பற்றாக்குறை ஏற்பட்டால், நிலைமையை மீட்டெடுக்க குறைந்தபட்சம் மூன்று நாட்கள் தேவைப்படும் என்று தெரிவித்த அவர், திங்கட்கிழமை பிற்பகலில் செயற்கை எரிபொருள் தட்டுப்பாடு தீர்ந்து, விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றார்.
உலக சந்தையில் ஏற்படும் விலை ஏற்ற இறக்கத்துக்கு ஏற்ப ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என்று வலுச்சக்தி அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.