;
Athirady Tamil News

ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலை மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடாம்!!

0

ஒழுக்காற்று நடவடிக்கைக்குப் பயந்தே பல்கலைக்கழக மாணவன் மனித உரிமை ஆணைக்குழுவில், துணைவேந்தருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாக யாழ்.பல்கலைக்கழக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர், தான் ஒரு மாணவன் என்ற வரம்பைத் தாண்டி, மாணவர் ஒழுக்கக் கோவை மற்றும் மாணவர் ஒன்றியச் செயற்பாட்டு நடைமுறைகளை மீறிச் செயற்பட்டதன் காரணமாக அவர் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்படதனாலேயே துணைவேந்தர் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டை மேற்கொண்டார் என அறியவருகிறது.

மாணவர்களின் உரிமைக்காகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் வரைமுறையுடன் செயற்பட்ட தன் மீது பழிவாங்கப் போவதாக துணைவேந்தர் பகிரங்கமாகக் கூறியுள்ளார் என்று யாழ்ப்பாணத்திலுள்ள மனித உரிமைகள் ஆணைக குழுவின் பிராந்திய அலுவலகத்தில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத் தலைவர் எஸ் வினுஜன் முறைப்பாடொன்றை மேற்கொண்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ். பல்கலைக்கழக மாணவர் நலச்சேவை அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போதே, இவ்வ்வாறு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தாவரவியல் துறையில் உள்ள இரு விரிவுரையாளர்களுக்கு இடையிலான தனிப்பட்ட முரண்பாடுகளில், விரிவுரையாளர் ஒருவரால் குறித்த மாணவன் தவறாக வழிநடத்தப்பட்டு வந்துள்ளார்.

மாணவர்களை விரிவுரைகளுக்கு போக வேண்டாம் என தடுத்துள்ளார். துறை ஒன்றில் காணப்படும் முரணபாட்டுக்காக விஞ்ஞான மாணவர் ஒன்றியத்தைத் தவறாகப் பயன்படுத்தி, ஏனைய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்குக் கூடத் தெரியாமல், சிரேஷ்ட பொருளாளரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல், தன்னிச்சையாக ஒரு விரிவுரையாள் எழுதிக் கொடுத்த விடயங்களைப் பல இடங்களில் ஒப்புவித்து வந்துள்ளார்.

பீடாதிபதி, மற்றும் துணைவேந்தர் குறித்தும் ஊடக சந்திப்பொன்றை நடாத்தியிருந்தார். இவரது தன்னிச்சையான செயற்பாடுகள் பற்றி கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக முறைப்பாடுகள் பீடாதிபதிக்கு கிடைத்துள்ளன.

இவரது செயற்பாடுகள் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு இருக்கின்ற நடத்தை சார் எல்லைகளை மீறிய காரணத்தினால், விஞ்ஞான பீடத்தின் விரிவுரையாளர்கள் பலர் எழுத்து மூலம் முறைப்பாடுகளைச் செய்திருந்தனர்.

இந் நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி அனைத்துப் பீடங்களினதும் மாணவர் ஒன்றியங்களின் பிரதிநிதிகளுக்கும், துணைவேந்தர், பீடாதிபதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போது, குறித்த மாணவன் தன்னுச்சையாக மாணவன் என்ற எல்லையை மீறிச் செயற்படுகின்றமை குறித்தும், இதனால் ஏற்படப் போகும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்தும் துணைவேந்தரால் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது.

குறித்த மாணவன் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு நீண்ட காலமாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்த போதிலும், அவரது மாணவர் ஒன்றியப் பதவி கடந்த வாரத்துடன் முடிவுக்கு வந்ததனாலும், அவர் கடந்த மாதம் இறுதி வருடப் பரீட்சைக்குத் தோற்றியதன் காரணமாகவே, பரீட்சையைக் குழப்பக் கூடாது என்ற நோக்கிலேயே விசாரணைகள் ஒத்திப்போடப்பட்டன என்றும், கடந்த 3ஆம் திகதி அவர் மீதான முதலாவது விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைச் செய்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

யாழ்.பல்கலை துணைவேந்தருக்கு எதிராக மனிதவுரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.