அலிபிரி பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கு தரிசன டோக்கன்கள் வழங்குவது எப்போது?: பக்தர் கேள்வி..!!
திருமலையில் உள்ள அன்னமயபவனில் நேற்று தொலைப்பேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் ஏ.வி.தர்மாரெட்டி பங்கேற்று பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு பதில் அளித்துப் பேசினார். பக்தர்கள் தெரிவித்த குறைகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:- கிஷோர், காவளி: விரைவில் காலாவதியாகப் போகிற அரசு பாண்டுகள் ரூ.5 ஆயிரம் கோடி டெபாசிட் அரசாங்கத்துக்கு முதலீடு செய்யப்போவதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது உண்மையா? அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி: தேவஸ்தான வரலாற்றில் எந்த அரசாங்கத்துக்கும் பணம் கொடுத்ததில்லை. எதிர்காலத்திலும் கொடுக்காது. அறங்காவலர் குழு தலைவர் மீதும், தேவஸ்தானம் மீதும் அவதூறு பரப்ப வேண்டாம். தவறான தகவல்களை தருகிறார்கள். அறங்காவலர் குழு தலைவர் மற்றும் அறங்காலர் குழு உறுப்பினர்கள் இதுவரை எந்தத் தவறும் செய்யவில்லை. இனியும் செய்ய மாட்டார்கள். மாநில அரசுக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானம் முதலீடு செய்ததில்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தேவஸ்தானம் இதுவரை ரூ.15,938 கோடியை டெபாசிட் செய்துள்ளோம். இனிமேல் அதிக வட்டி தரும் தேசிய வங்கிகளில் டெபாசிட் செய்வோம். தகவறான தகவல்களை நம்ப வேண்டாம், என்று பக்தர்களை கேட்டுக் கொள்கிறேன். ஹனுமந்த்பிரசாத், ஐதராபாத், திருமால்ராவ், நல்கொண்டா: எங்கள் காலனியில் உள்ள ராமர் கோவிலில் தூபம், தீபம், பிரசாதம் செய்ய முடியவில்லை. மாநில அரசு வழங்கும் ரூ.5 ஆயிரம் நிதி போதாது. திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பாக நிதி உதவி செய்கிறீர்களா, எங்கள் காலனியில் கல்யாண மண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்? அதிகாரி: தேவஸ்தான அதிகாரிகள் அதைப் பார்த்து, ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் உதவி வழங்க முயற்சி செய்வார்கள். கல்யாண மண்டபம் கட்டுவதற்கான விதிகளை அதிகாரிகள் பரிசீலிப்பார்கள். பென்சலயா, நெல்லூர்: எங்கள் கிராமத்தில் கோவில் கட்ட தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. பின்னர் ரத்து செய்யப்பட்டுள்ளது, காரணம் என்ன? அதிகாரி: கோவில் கட்டுவதற்கான விதிகளை பரிசீலனை செய்வோம். சுபாஷினி, சென்னை: முதியோர் சாமி தரிசனம் செய்ய வரும்போது, உதவியாளராக வரும் ரத்த சம்பந்தப்பட்ட உறவினர் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. முதியோர் கோவிலில் தள்ளப்படுகின்றனர்? அதிகாரி: ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் மட்டுமே முதியவர்களை அழைத்துச் சென்று தரிசனம் செய்ய நடவடிக்கை எடுப்போம். ராம்பாபு, கம்மம்: சாமிக்கு வெள்ளிக் கிரீடம் அணிவிக்க வேண்டும்? அதிகாரி: ஏழுமலையானுக்கு வெள்ளிக் கிரீடம் அணிவிப்பதில்லை. உங்களிடம் இருந்து வெள்ளிக் கிரீடத்தைக் காணிக்கையாகப் பெற்று அதை ஏழுமலையான் கோவில் துணைக் கோவில்களில் பயன்படுத்துவதை நாங்கள் பரிசீலிப்போம். சாம்பையா, வாரங்கல்: வி.ஐ.பி பிரேக் தரிசனங்களுக்கு எப்போது கடிதம் கொடுக்க வேண்டும்? அதிகாரி: கடிதத்தை முந்தைய நாளிலில் இருந்து 2 மணி நேரத்துக்குள் கொடுக்க வேண்டும். ஆறரை மணி நேரம் கழித்து உங்கள் மொபைலில் ஒரு எஸ்.எம்.எஸ். வரும். பின்னர் தரிசன டிக்கெட்டுகளை பெறலாம். பாலாஜி, சென்னை: சென்னையில் இருந்து திருமலைக்கு எலக்ட்ரிக் பைக்கில் வந்தோம். சார்ஜிங் பாயின்ட் இல்லை. திருமலை மற்றும் திருப்பதியில் சார்ஜிங் பாயின்ட்களை அமைக்கலாம்? அதிகாரி: தற்போது அலிபிரி மற்றும் திருமலையில் தேவஸ்தான சார்ஜிங் பாயின்ட்கள் உள்ளன. பக்தர்கள் தேவைப்பட்டால் பயன்படுத்தி கொள்ளலாம். விரைவில் அரசு போக்குவரத்துக்கழகம் மற்றும் எச்.சி.எல். நிறுவனத்துடன் இணைந்து சார்ஜிங் பாயின்ட்களை அமைப்போம். அசோக்குமார், சென்னை: அலிபிரி நடைபாதையில் சோதனையின் போது ஊழியர்கள் பக்தர்களை அவமதிக்கிறார்கள்? அதிகாரி: பாதுகாப்பு காரணங்களுக்காக அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டுவில் சோதனை நடத்தப்படுகிறது. பக்தர்களை அவமானப்படுத்தாமல் இருக்குமாறு நடவடிக்கை எடுப்போம். விஜிலென்ஸ் ஊழியர்கள் உங்களை அவமானப்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். தேஜா, பெங்களூரு: முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு நேரடி தரிசனம் கொடுங்கள்? அதிகாரி: தினமும் ஒரு மணி நேரம் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறு குழந்தைகளின் பெற்றோருக்கு தரிசனம் வழங்குகிறோம். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்து திருமலைக்கு வர வேண்டும். ராஜேஸ்வரராவ், கரீம்நகர்: ஸ்ரீவாரி சேவையில் லட்டு பிரசாத சேவை நீக்கப்பட்டது. மீண்டும் சேர்க்கவும்? அதிகாரி: அனுபவம் உள்ளவர்கள் மற்றும் லட்டு பிரசாத சேவை செய்யக்கூடியவர்களை பரிசீலனை செய்வோம். யுவராஜ், திருப்பதி: சீனிவாசம் விடுதி வளாகத்தில் சாலையைக் கடக்க பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். அங்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும்? அதிகாரி: திருப்பதி மாநகராட்சி, கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் தெரிவித்து, பிரச்சினையை தீர்க்க ஏற்பாடு செய்வோம். சூர்யநாராயணா, விஜயவாடா, மல்லேஸ்வரராவ், நிர்மல்: திருமலைக்கு அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய பாதைகளில் நடந்து வரும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது எப்போது, இலவச தரிசனத்தில் செல்லும் டைம் ஸ்லாட் டோக்கன்களை ஆன்லைனில் வெளியிடலாமா? அதிகாரி: நாங்கள் கடந்த 1-ந்தேதி முதல் அலிபிரியில் உள்ள பூதேவி வளாகம், சீனிவாசம், கோவிந்தராஜசாமி சத்திரங்களில் டைம் ஸ்லாட் டோக்கன்களை வழங்குகிறோம். ஸ்ரீநாத், கிழக்கு கோதாவரி: ஸ்ரீவாரி சேவா செய்ய விண்ணப்பிக்க ஆப் லைனில் அனுமதிக்கப்படுமா? அதிகாரி:ஸ்ரீவாரிசேவை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய வேண்டும். ஸ்ரீவாரிசேவா செய்கின்ற எந்த சேவகருக்கும் பணம் கொடுக்க வேண்டாம். சிவகோபால், கர்னூல்: நாராயணகிரி தோட்டத்தில் அமைக்கப்பட்டு இருப்பதுபோல் கவுண்ட்டர்களுக்கு வெளியே கொட்டகை அமைத்தால் பக்தர்களுக்கு வசதியாக இருக்கும்? அதிகாரி: திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே திருமலை முழுவதும் கொட்டகை அமைக்க முடியாது. லட்சுமிநாராயணா, ராஜமுந்திரி: பக்தி சேனலில் ஒளிப்பரப்பாகும் நிகழ்ச்சிகள் சிறப்பாக உள்ளன. ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் இந்த நிகழ்ச்சிகளை பார்த்து வருகிறோம். குழந்தைகள் மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் காணிக்கை அளிப்பவர்களுக்கு பிரேக் தரிசனம் அளிக்கலாமா? அதிகாரி: குழந்தைகள் இருதய மருத்துவமனைக்கு ஏற்கனவே ஒரு லட்சம் ரூபாய் காணிக்கை அளித்தவர்களுக்கு பிரேக் தரிசனம் தருகிறோம். ரூ.10 ஆயிரம் காணிக்கை அளிக்கும் பக்தர்களுக்கு தரிசனம் வழங்க முடியாது. ஜெயலட்சுமி, கர்னூல்: ஒவ்வொரு மாதமும் வெளியிடப்படும் லக்கி டிப் ஆர்ஜித சேவைகள் கிடப்பதில்லை. நான் ஒரு இசை ஆசிரியர், எனக்கு மேடையில் பாட வாய்ப்பு தர முடியும்? அதிகாரி: ஸ்ரீவாரி ஆர்ஜித சேவையை ஆன்லைனில் பதிவு செய்யலாம் மற்றும் அதற்கு முந்தைய நாள் திருமலையில் உள்ள மத்திய வரவேற்பு மையத்தில் லக்கி டிப் கவுண்ட்டரில் பங்கேற்கலாம். நீங்கள் பக்தி பாடல்களை பாட வேண்டுமென்றால் நாத நீராஞ்சன மேடையில் பாட வாய்ப்பளிக்கப்படும். மேற்கண்டவாறு பக்தர்கள் தெரிவித்த குறைகளுக்கு அதிகாரி பதில் அளித்தார்.