ஆந்திராவில் கிராமத்தில் புகுந்து மேலும் 2 மாடுகளை அடித்துக் கொன்ற புலி..!!
ஆந்திர மாநிலம் ஸ்ரீலவலசா கிராமம் அருகே பெரிய ஆண் புலி ஒன்று சுற்றி திரிகிறது. இது இரவு நேரங்களில் கிராமத்தில் புகுந்து ஆடு மாடுகளை கொன்று இழுத்து செல்கிறது. மேலும் வனப்பகுதியை ஒட்டி இருந்த சாலைகளில் அடிக்கடி கடந்து செல்கிறது. சாலையில் செல்லும் சிலர் மீதும் புலி பாய்ந்துள்ளது அதிலிருந்து அவர்கள் தப்பி உள்ளனர். இதனால் அந்த பகுதி வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர். நேற்று கிராமத்தில் புகுந்து 2 மாடுகளை புலி கொன்று தின்றது. இதுகுறித்து தகவல் அறிந்த விஜயநகரம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து புலியின் அடையாளங்களை பதிவு செய்தனர். அவர்கள் புலி நடமாட்டம் குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளின் உதவியுடன் ஸ்ரீலவலசா மற்றும் அதை ஒட்டிய கிராமங்களில் உஷார்படுத்தப்பட்டனர். கடந்த 5 மாதங்களாக அட்டகாசம் செய்து வரும் பெரிய புலி, மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் உள்ள மக்களுக்கு தூக்கமின்மையை ஏற்படுத்தி உள்ளது. புலி நடமாட்டத்திற்கு பயந்து விவசாயிகள் தங்களுடைய விவசாய நிலங்களுக்கு செல்லாமல் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. புலியை பிடித்துஅடர்ந்த காட்டில் விட வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.