செல்போனுக்காக 8-ம் வகுப்பு மாணவன் கொலை: திருப்பதியில் வாலிபர் கைது..!!
ஆந்திர மாநிலம், அனக்கா பள்ளி மாவட்டம் பாடால பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமு இவரது மூத்த மகன் சுரேஷ் (வயது 13). அங்குள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வாரம் சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை என்பதால் அங்குள்ள வனப்பகுதியில் மேய்ச்சலுக்காக ஆடுகளை ஓட்டி சென்றார். அப்போது அவரது தந்தையின் செல்போனை எடுத்துச் சென்றார். மாலை 6 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் வழக்கம் போல் வீட்டிற்கு வந்து விட்டன. ஆனால் ஆடுகளை ஓட்டிச் சென்ற சுரேஷ் இரவு நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மகனை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். அவர் கிடைக்கவில்லை. இந்த நிலையில் மறுநாள் வனப்பகுதியில் சுரேஷ் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தான். அவன் எடுத்துச் சென்ற செல்போன் காணாமல் போய் இருந்தது. இதுகுறித்து அனக்கா பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை நடத்தினர். மாணவர் எடுத்துச்சென்ற செல்போனில் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து சோதனை செய்ததில் வேறு ஒரு வாலிபர் அந்த செல்போனை பயன்படுத்தி வந்தது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் செல்போனை வைத்திருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் அனக்கா பள்ளியில் உள்ள ஒரு கடையில் செல்போன் வாங்கியதாக தெரிவித்தார். போலீசார் செல்போன் கடைக்கு சென்று விசாரித்தபோது அனக்கா பள்ளி பகுதியை சேர்ந்த வெங்கட சூரியா நாகேஸ்வரராவ் என்பவர் தனது ஆதார் அட்டை, பான் கார்டு எண்களை கொடுத்துவிட்டு செல்போனை விற்று சென்றது தெரிய வந்தது. நேற்று இரவு திருப்பதி பஸ் நிலையம் அருகே இருந்த வெங்கட சூரிய நாகேஸ்வரராவிடம் விசாரித்தனர். இதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த சுரேசை கொலை செய்துவிட்டு செல்போனை பறித்து சென்றதாக அவர் கூறினார். இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.